Header Ads

பிரான்ஸ் பொருட்களைப் புறக்கணிக்க துருக்கி ஜனாதிபதி எர்துவான் அழைப்பு

நபிகள் நாயகத்தை சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் தொடர்பில் பிரான்ஸ் மீதான எதிர்ப்பு முஸ்லிம் நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டு பொருட்களை புறக்கணிக்குமாறு துருக்கி மக்களை அந்நாட்டு ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பங்களாதேஷில் கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோனின் கேலிச் சித்திரத்தை ஏந்தி இருந்தனர். அதில், “மென்ரோன் அமைதிக்கு எதிரானவர்” என்று எழுதப்பட்டிருந்தது. மறுபுறம் பிரான்சுக்கான தூதுவரை திரும்ப அழைத்துக்கொள்ளும் தீர்மானம் ஒன்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே மெக்ரோனுடன் மோசமான உறவைக் கொண்டிருக்கும் எர்துவான், பிரான்ஸ் இஸ்லாமிய எதிர்ப்புத் திட்டத்தை பின்பற்றுவதாக குற்றம்சாட்டினார்.

“பிரான்ஸ் பொருட்களுக்கு உதவுவதற்கு அல்லது அவைகளை வாங்குவதற்கு வேண்டாம் என்ற எமது நாட்டு மக்களுக்கு நான் அழைப்பு விடுகின்றேன்” என்று எர்துவான் தெரிவித்தார்.

பிரான்ஸ் பொருட்களை புறக்கணிப்பது தொடர்பில் வலுத்துவரும் குரல்களுக்கு மத்தியிலேயே எர்துவானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் பல்பொருள் அங்காடிகளில் உள்ள பிரான்ஸ் உற்பத்திகளை நீக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

பிரான்ஸ் பல்பொருள் அங்காடி வலையமைப்பான கெர்ரபோரை புறக்கணிப்பதற்கு சவூதி அரேபியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அங்கு நேற்றும் மக்கள் கூட்டம் நிரம்பியது. இன்னும் தமது வர்த்தகத்தில் எந்தத் தாக்கமும் ஏற்டவில்லை என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸின் பிரதான தானிய உற்பத்திகள் முஸ்லிம் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு ஆபிரிக்க நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பிரான்ஸின் வாகன மற்றும் சில்லறை உற்பத்தி நிறுவனங்கள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலேயே அதிகம் செல்வாக்கு செலுத்துகின்றன.

இந்த புறக்கணிப்பு பிரசாரத்தின் தாக்கம் பற்றி இப்போதே கணிக்க முடியாது இருப்பதாக பிரான்ஸ் வர்த்தக அமைச்சர் பிரான்க் ரெய்ஸ்டர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது பிரான்ஸ் விவசாய உற்பத்திகளில் தாக்கம் ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

நபிகள் நாயகத்தைச் சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களை ஆசிரியர், மாணவர்களோடு பகிர்ந்துகொண்டதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை உருவானது.

கொல்லப்பட்ட ஆசிரியர் ஒரு வீரர் என்றும், தீவிரவாதிகள் பிரான்ஸின் எதிர்காலத்தைக் கைப்பற்ற விரும்பி அவரைக் கொன்றனர் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் முடிவை மத்திய கிழக்கு நாடுகள் கைவிட வேண்டுமென்று பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் "அடிப்படை அற்ற" அழைப்புகள் "ஒரு தீவிர சிறுபான்மை குழுவால் மேற்கொள்ளப்படுவதாக" பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, "இஸ்லாமியவாதிகள் நமது எதிர்காலத்தை பறிக்க நினைப்பதால் ஆசிரியர் சாமுவேல் பேட்டி கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது" என்று எம்மானுவேல் மெக்ரோன் எதிர்வினையாற்றியிருந்தார். இதே கருத்தை கடந்த ஞாயிறன்று அவர் உறுதிப்படுத்தினார்.

முகமது நபி அல்லது அல்லாஹ்வின் (கடவுள்) சித்தரிப்புகள் அல்லது உருவங்களை இஸ்லாமிய பாரம்பரியம் வெளிப்படையாக தடைசெய்கிறது.

Wed, 10/28/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.