கண்டி டஸ்கர்ஸ் அணியை வாங்கிய சல்மான் கான் குடும்பம்

இந்தியாவின் பொலிவூட் நடிகரான சல்மான் கானின் குடும்பம், இலங்கையில் நடைபெறவுள்ள கன்னி லங்கா ப்ரீமியர் லீக் தொடரின், கண்டி டஸ்கர்ஸ் அணியை வாங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் எதிர்வரும் மாதம் 21ம் திகதி லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஆரம்பிக்கவுள்ளதுடன், தொடருக்கான வீரர்கள் தெரிவு கடந்த திங்கட்கிழமை (19) நடைபெற்றது. அந்தவகையில் கண்டி டஸ்கர்ஸ் அணியின் உரிமையை, சல்மான் கானின் இளைய சகோதரரான சொஹைல் கானின், ”சொஹைல் கான் இன்டர்நெசனல் LLP” நிறுவனம் வாங்கியுள்ளது. குறித்த விடயத்தினை சொஹைல் கான் உறுதிசெய்துள்ள நிலையில், அவர் கண்டி டஸ்கர்ஸ் அணியின் அனைத்து போட்டிகளிலும் மைதானத்தில் இருப்பார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். அதேநேரம், கண்டி டஸ்கர்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் க்ரிஸ் கெயில் இருப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“கிறிஸ் கெயில் உண்மையான யுனிவர்சல் பொஸ். அவருடன், சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர். குசல் பெரேரா இலங்கையில் உள்ள எமது ஐகோன் வீரர். அவருடன் லியம் ப்ளங்கட், வஹாப் ரியாஸ், குசல் மெண்டிஸ் மற்றும் நுவான் பிரதீப் ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். எமது அணி சமனிலையானதும், அனுபவம் கொண்ட அணியாகவும் உள்ளது” என சொஹைல் கான் குறிப்பிட்டார். லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள மற்றுமொரு அணியான காலி க்ளேடியட்டர்ஸ் அணியின் உரிமையை, பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் குவெட்ட க்ளேடியேட்டர்ஸ் அணியின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். எனினும், ஏனைய அணிகளின் உரிமையாளர்கள் யார் என்பதை இதுவரையில், தொடர் ஏற்பாட்டாளர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 10/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை