தடுக்க மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம்

தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் டாக்டர் சுதத் சமரவீர

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் நிலையில் நாட்டு மக்களின் பூரண ஒத்துழைப்பு மூலம் மட்டுமே நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மக்கள் சமூக இடைவெளியை அலட்சியப்படுத்தி நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக மாறலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நாளுக்கு நாள் வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வரும் நிலையில் இந்த நிலை தொடர்ந்தால் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ள அவர், தெரிவு செய்யப்பட்ட பகுதிகளிலேயே ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுமக்களின் நடமாட்டத்திற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் திருமணங்கள், சமய நிகழ்வுகள் மற்றும் மரணச் சடங்குகள் மூலமே இம்முறை கொரோனா வைரஸ் பெருமளவு பரவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் நாட்டில் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை நேற்றைய தினம் மேலும் 263 பேர் புதிதாக வைரஸ் தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் இதுவரை மொத்தம் 7784 வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 36 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து பதிவாகியுள்ளது டன் ஏனைய 227 பேர் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை பேருவளை, அளுத்கம,பயாகலை ஆகிய பொலிஸ் நிர்வாக பிரிவுகளுக்கு அமுல்படுத்தப் பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலுள்ள கம்பஹா மாவட்டத்தின் அனைத்து அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளையும் மக்கள் சேவைக்காக இன்று திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் 92 பேர் நேற்று முன்தினம் இரவு இனங்காணப்பட்டுள்ள நிலையில்நேற்று முன் தினம் மொத்தமாக 368 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கிணங்க நேற்றைய தினமும் மேலும் 89 வைரஸ் தொற்று நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும் அதற்கிணங்க நேற்றுவரை மொத்தமாக 3803 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை நாட்டில் புதிய கொரோனவைரஸ் தொற்றாளர்களாக இனங் காணப்படும் அனைவரையும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பதா அல்லது எத்தகையோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் போன்ற விடயம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்து வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கொழும்பு கோட்டை பொலிஸ் நிர்வாக பிரதேசத்தில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் காலிக்கான தபால் ரயில் தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், நேற்றுப்பிற்பகல் முதல் புறக்கோட்டையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கொரோனவைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக ஆதிவாசிகளின் கிராமமான தம்பானை சுற்றுலா பயணிகளுக்காக மூடப்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை