வான்கதவுகள் திறப்பு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மத்திய மலை நாட்டில் கடும் மழை;

மத்திய மலை நாட்டில் சனிக்கிழமை (10) இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது. லக்சபான பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக லக்சபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஆறு அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ்ந்த நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் காசல்ரி, மவுசாகலை, கெனியோன், விமலசுரேந்திர, பொல்பிட்டிய மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளன.

மழையுடன் கடும் குளிர் மற்றும் கடும் காற்று வீசுவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக சில வீதிகளில் போக்குவரத்தும் ஸதம்பிதம் அடைந்துள்ளன. தொடர்ந்தும் பெய்து வரும் அடை மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சிக்கண்டுள்ளன.

மழை மற்றும் கடும் குளிர் காற்று காரணமாக வேலைக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே காணப்படுவதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான விதிகளில் மழையுடன் அடிக்கடி பனி மூட்டமும் காணப்படுவதனாலும் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதனாலும் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹட்டன் விசேட நிருபர் 

Mon, 10/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை