ஸிம்பாப்வே அணியின் இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று

பாகிஸ்தான் தொடருக்கான ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியில் மேலதிக வீரர்களாக இடம்பிடித்திருந்த ரீஜஸ் சகப்வா மற்றும் டைமைசன் மெரூமா ஆகிய இரண்டு வீரர்களுக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கொரோன வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகளில் விளையாடுவதற்காக 20 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி கடந்த 20ஆம் திகதி இஸ்லாமாபாத்தை வந்தடைந்தது.

முன்னதாக பாகிஸ்தான் தொடருக்காக 25 பேர் கொண்ட மாகாண குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்திருந்ததுடன், இதில் இடம்பிடித்த அனைவரும் ஹராரேவில் உள்ள கிரிக்கெட் அகடமியில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். இதில் பாகிஸ்தான் தொடருக்கான 20 பேர் கொண்ட குழாத்தில் தெரிவு செய்யப்படாத ரீஜஸ் சகப்வா (33 வயது) மற்றும் டைமைசன் மெரூமா (32 வயது) ஆகிய இரண்டு வீரர்களும் ஹராரேவில் உள்ள ஸிம்பாப்வே கிரிக்கெட் அகடமியில் ஸ்தாபிக்கப்பட்ட உயிர் பாதுகாப்பு வளையத்தில் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.

மேலும், இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் – 19 வைரஸ் தொற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த அகடமியில் வீரர்களுக்கு உதவி வழங்கிய மேலும் இரண்டு ஊழியர்களுக்கும் கொவிட் – 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை (22) வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸிம்பாப்வே அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு புறப்படுவதற்கு முன்பும் இஸ்லாமாபாத்திற்கு வந்தடைந்த பிறகும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் எந்தவொரு வீரருக்கும் கொவிட் – 19 வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தை வந்தடைந்துள்ள குறித்த இரண்டு வீரர்களும் பிரதான அணியுடன் இல்லாமல் பிறிதொரு ஹோட்டலில் தனித்தனியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

12 வருடங்களுக்கு முன் சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட ரீஜஸ் சகப்வா வழக்கமாக ஸிம்பாப்வேயின் டெஸ்ட் அணியில் இடம்பெற்று வருகின்றார். அதே நேரத்தில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒற்றை டெஸ்டில் டைமைசன் மெரூமா ஸிம்பாப்வே அணியில் இடம்பிடித்து இருந்தார். ஸிம்பாப்வே வீரர்களின் சுய தனிமைப்படுத்தல் காலம் செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது, அதற்கு முன்னர் மீண்டும் ஒருதடவை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இம்மாதம் 30ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளதுடன், 3 போட்டிகளைக் கொண்ட ரி 20 தொடர் நவம்பர் 7ஆம் திகதி லாகூரில் ஆரம்பமாகவுள்ளது.

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை