தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா ஒப்புதல்

தாய்வானுக்கு சுமார் 1.8 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், சீனாவுடனான பதற்றத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரொக்கெட் லோஞ்சர்கள், சென்சார்கள் மற்றும் பீரங்கிகள் உட்பட மூன்று ஆயுத அமைப்புகளைக் கொண்டதாக இந்த உடன்படிக்கை அமைந்துள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.

தாய்வான் தம்மை தனிநாடக கூறியபோதும் அது தமது பிரிந்து சென்ற மாகாணம் என்று சீனா கருதுகிறது.

அந்த தீவை மீண்டும் தமது நாட்டுக்குள் இணைப்பதற்கு படைப் பலத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை சீனா மறுக்காத நிலையில் இது தொடர்பில் அண்மைய ஆண்டுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தாய்வான் மீது சீனா படையெடுக்கும் என்று தாம் நம்பவில்லை என்றும் எதிர்காலத்தில் அந்த தீவு தம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் ஓபிரைன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்த ஆயுதங்கள் “போர் திறனை கட்டியெழுப்பும் என்றும் அதிகரித்து வரும் சீரற்ற போருக்கு மத்தியில் பலம் சேர்க்கும்” என்றும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆயுத விற்பனை அமெரிக்காவுடனான சீன உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவசியமான வகையில் பதிலளிக்கப்படும் என்றும் சீனா வெளியுறவு அமைச்சு எச்சரித்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Fri, 10/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை