அரிசி இறக்குமதி, விலை கட்டுப்பாடு; விரைவில் அரசின் அறிவிப்பு வெளிவரும்

அரிசியை இறக்குமதி செய்ய அரசு தீர்மானம்

அரிசியை இறக்குமதி செய்தல் மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சரவையில் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் அது தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்கம் பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில் ஏனைய அரிசி வகைகள் இறக்குமதி மற்றும் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் என்ன? என ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

அரசாங்கமானது இலங்கை- பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையின் கீழ் வரிச்சலுகை அடிப்படையில் 06 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்வதற்கான அனுமதி தனியார்துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அவற்றில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதனைக் கவனத்திற் கொண்டு அரசு சதொச, அரச வரத்தகக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கூடாக மட்டுமே பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அது தொடர்பில் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ள பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 10/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை