Header Ads

கொரோனா தொற்று தொடர்பில் டிரம்ப் - பைடன் கடும் விவாதம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிக்கட்ட விவாதத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் போட்டியாளரான ஜோ பைடன் இருவரும் கொரோனா தொற்று மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பெருந் தொற்றுக்கு எதிராக மேலும் முடக்க நிலைகளை கொண்டுவருவது குறித்து பைடன் கூறும்போது, அமெரிக்காவை மீண்டும் திறப்பதற்கு நேரம் வந்துவிட்டதாக டிரம்ப் வலியுறுத்தினார்.

மகனின் வர்த்தகச் செயற்பாடுகள் மூலம் பைடன் தனிப்பட்ட முறையில் நன்மைகள் பெறுவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். மறுபுறம் டிரம்பின் வெளிப்படையற்ற வரி விவகாரங்கள் தொடர்பில் பைடன் பதிலுக்கு குற்றம்சாட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் கருத்துக் கணிப்புகளின்படி உறுதியான முன்னிலையில் உள்ளார்.

எனினும் அதன் புள்ளிகள் குறைவாக இருக்கும் நிலையில் ஒருசில மாநிலங்கள் தேர்தல் முடிவில் செல்வாக்குச் செலுத்த வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் தினத்திற்கு முன்னதாக முன்னர் எப்போது இல்லாத அளவுக்கு 47 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே தமது வாக்கை அளித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க நேரப்படி கடந்த வியாழக்கிழமை இரவு டென்னசி, நஷ்வில்லாவில் டிரம்ப் மற்றும் பைடனுக்கு இடையிலான இறுதி நேருக்கு நேர் விவாதம் இடம்பெற்றது. இந்த இருவரும் கடந்த செப்டெம்பர் 29 ஆம் திகதி நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்ட போதும் ஒருவரை ஒருவர் தூற்றி பெரும் இடையூறுகளுடன் முடிந்தது.

இதனால் ஒருவர் பேசும்போது மற்றவர் இடையூறு செய்யாத வகையில் ஒலிவாங்கியை துண்டிக்கும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததால் அவ்வாறான இடையூறுகள் குறைவாகவே இருந்தது.

90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பொது முடக்கத்தை கொண்டு வருவதிலிருந்து பருவ நிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் எரிபொருள் தொழிற்சாலைகளை மூடுவது வரை என அனைத்தும் விவாதிக்கப்பட்டது.

ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினாலும், முந்தைய விவாதத்தைக்காட்டிலும் ஓரளவு அமைதியான விவாதமாக இது அமைந்தது.

இதில் பைடன் கொரோனா தொற்றை டிரம்ப் கையாளத் தவறியதாக மீண்டும் ஒரு முறை குற்றம்சாட்டினார்.

“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த டிரம்பிடம் எந்த திட்டமும் இல்லை. நோயுடன் வாழ பழகிக்கொண்டு விட்டோம் என டிரம்ப் கூறினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில் உள்ளது.

தளர்வுகளை வழங்கும் அரசு, வைரஸ் பரவலை தடுக்க வழிமுறைகளை கையாளவில்லை. கொரோனா வைரஸ் பெரிய பிரச்சினையே இல்லை என டிரம்ப் ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.

டிரம்ப் எதற்காக முகக்கவசம் அணிய மறுக்கிறார். ஜனவரி மாதமே கொரோனா பற்றி தெரிந்து இருந்தும் ஏன் சொல்லவில்லை” என்று பைடன் குறிப்பிட்டார். எனினும் நோய்த் தொற்றில் இருந்து அதிகமானவர்கள் மீண்டு வருவதால் நாட்டை முடக்குவது பொருளாதாரத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

“இது பெரும் பொருளாதாரத்தைக் கொண்ட பெரிய நாடு. மக்கள் தொழில்வாய்ப்பை இழக்கும்போது தற்கொலைக்கு முயல்கின்றனர். மன அழுத்தம், குடிப்பழக்கம், போதைப்பொருள் பயன்பாடு இதுவரை காணாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது” என்று டிரம்ப் கூறினார்.

ஆண்டு இறுதியில் தடுப்பு மருந்து வந்ததும் இந்த வைரஸ் காணாமல்போய்விடும் என்று டிரம்ப் குறிப்பிட்டபோது, இந்த நாடு ஒரு கறுப்பு குளிர்காலம் ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக பைடன் எச்சரித்தார்.

73 வயதான ஜனாதிபதி டிரம்ப், “அதனுடன் வாழ நாம் பழகிக்கொள்கிறோம்” என்று கூறியபோது, 77 வயதான பைடன், “அதனால் நாம் உயிரிழந்து வருகிறோம்” என்று பதிலளித்தார்.

இரு வேட்பாளர்களுக்கு இடையிலான இந்த கடைசி விவாதத்தின்போது சில முக்கிய விவகாரங்களில் இருவருக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

குறிப்பாக, டொனால்ட் டிரம்ப் தனது சக போட்டியாளர் ஜோ பைடனை நோக்கி, "நீங்கள் எண்ணெய் உற்பத்தித்துறையை மூடிவிடுவீர்களா?" என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த பைடன், "எண்ணெய் உற்பத்தித்துறை கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்துவதால் நான் அதை சீர்மாற்றம் செய்வேன்" என்று கூறினார்.

மேலும், பெரிய எண்ணெய் தொழில்கள் காலப்போக்கில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் மாற்றப்பட வேண்டும் என்று பைடன் மேலும் கூறினார்.

"அடிப்படையில் எண்ணெய் தொழிற்துறையை அழிக்கப் போவதாக அவர் கூறுகிறார். டெக்சாஸ், அதை நினைவில் கொள்வீர்களா? பென்சில்வேனியா, ஓக்லஹோமா, ஓஹியோ மக்களே இதை நினைவில் கொள்வீர்களா?" என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்க தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையில் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ளது.

Sat, 10/24/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.