Header Ads

அஹிம்சையை உலகுக்கு கற்றுத் தந்த காந்தி மகான்

150 வது ஜனன தினம் இன்று

உலகுக்கு அஹிம்சையை அறிமுகப்படுத்தியவரும், இந்தியாவின் தேசத்தந்தையுமான மகாத்மா காந்தியின் 150 வது ஜனன தினம் இன்று ஆகும்.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இயற்பெயர் கொண்ட காந்தி இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்ற இடத்தில் 1869-ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2-ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தையார் பெயர் கரம்சந்த், தாயார் புத்திலிபாய். காந்திஜியின் தந்தை போர்பந்தரில் திவானாக பணியாற்றி வந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி.

பாடசாலையில் படிக்கும் போதே நேர்மையான மாணவனாக விளங்கிய காந்தி, தன் 13-ஆவது வயதில் கஸ்துரிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தன் 18-வயதில் உயர்கல்வி பயில இங்கிலாந்து சென்ற காந்தி பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார். படிப்பை முடித்து இந்தியா திரும்பிய காந்தி அப்போதைய பம்பாயில் (மும்பை) வழக்கறிஞராக பணியாற்றினார்.

பம்பாயில் பணியாற்றி வந்த காந்திக்கு 1893-ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் பணி புரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனையேற்று தென் ஆபிரிக்கா சென்ற காந்தி அங்கு சந்தித்த நிகழ்வுகள் அவரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அந்த நிகழ்வுகள்தான் பின்னாளில் அவர் ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட வீரராக காரணமாக அமைந்தன.

தென் ஆபிரிக்காவில் அவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்த போது கறுப்பு இனத்தவர்கள் மற்றும் இந்தியர்கள் நீதிமன்றத்தில் வாதாடும் போது தலைப்பாகை அணிந்து கொண்டு வாதாடக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. தென் ஆபிரிக்க ரயில்களில் வெள்ளையர்களை தவிர யாரும் முதல் வகுப்பில் பயணம் செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இவையெல்லாம் அவர் மனதில் விடுதலை உணர்வை தட்டி எழுப்பின. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதா என கொதித்தெழுந்தார்.

தென் ஆபிரிக்காவில் கறுப்பின மக்களும் இந்திய மக்களும் படும் துன்பங்களை சகித்துக் கொள்ள முடியாமல், அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தர 1894-ஆம் ஆண்டு 'இந்திய காங்கிரஸ்' என்ற கட்சியைத் தொடங்கி அவரே தலைமையேற்று நடத்தினார். அகிம்சை வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பெற்றுத் தந்தார்.தென் ஆபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய காந்தி, இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். 1921-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காந்தி, அகிம்சை வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்து மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டி ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு நெருக்கடி கொடுத்தார்.

வாளேந்தி போரிட்ட இந்திய மன்னர்களையும், துப்பாக்கி ஏந்தி போரிட்ட நேதாஜி போன்ற வீரர்களையும் எளிதாக கையாண்ட ஆங்கிலேய அரசு காந்திஜியின் அகிம்சை வழி போராட்டங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியது. காந்திஜியின் போராட்டங்கள் மிகவும் வித்தியாசமானவை. இந்தியாவில் இருந்து கொண்டே தனது போராட்டங்கள் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் திணறடித்தார்.காந்திஜியின் போராட்டங்களில் மிக முக்கியமான ஒன்று ஒத்துழையாமை இயக்கம். இதன்படி இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கக் கூடாது, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு செல்லக் கூடாது, இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரித்த துணிகளை அணியக் கூடாது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்திய வாடிக்கையாளர்களை நம்பி இருந்த இங்கிலாந்து கம்பெனிகள் மூடும் நிலைமைக்கு தள்ளப்பட்டன. இங்கிலாந்து தொழிலாளர்கள் பெரும் வேலையிழப்பை சந்தித்தனர். கிட்டத்தட்ட இங்கிலாந்து பொருளாதாரமே ஆட்டம் கண்டது. இந்தியாவில் இருந்து கொண்டே இங்கிலாந்து பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்த காந்திஜியின் அறிவுக்கூர்மையை கண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் வியந்து போனது. காந்திஜியின் மற்றொரு முக்கியமான போராட்டம் தண்டி யாத்திரை. 1930-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்தியாவில் உப்புக்கு வரி விதித்தது. என் நாட்டில் உற்பத்தியாகும் பொருளுக்கு பிரிட்டிஷ்காரர்கள் வரி விதிப்பதா என்று கொதித்தெழுந்த காந்தி, அதனை எதிர்த்து போராட்டம் ஒன்றை அறிவித்தார். அதன்படி 1930-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் திகதி அகமதாபாத்திலிருந்து 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடைபயணம் மேற்கொண்டார். மக்கள் கூட்டத்துடன் 23- நாட்கள் பயணத்திற்குப் பின்னர் தண்டி சென்றடைந்த காந்தி, அங்கேயே கடல் நீரில் உப்பு காய்ச்சி மக்களுக்கு விநியோகம் செய்தார். இதனை தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் இந்த போராட்டம் பரவியது. காந்திஜி உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆனால் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஆங்கிலேய அரசு காந்திஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரியை திரும்பப் பெற்றது.

1942-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து 'ஓகஸ்ட் புரட்சி' என்ற பெயரில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தைத் தொடங்கினார். இதன்படி எங்களை நாங்களே ஆண்டு கொள்கிறோம், அந்நியர்கள் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முழங்கினார். காந்திஜியின் மனஉறுதியையும் போராட்ட குணத்தையும் கண்ட ஆங்கிலேய அரசு வேறு வழி இன்றி 1947-ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15-ஆம் திகதி இந்தியர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறியது.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு முஹமது அலி ஜின்னா தலைமையில் ஒரு குழு முஸ்லிம்களுக்கு தனிநாடு கேட்டு போராட்டத்தைத் தொடங்கியது. அரும்பாடு பட்டு பெற்ற சுதந்திக் காற்றை சுவாசிப்பதற்குள் ஏற்பட்ட உள்நாட்டு பிரிவினையால் காந்தி கலக்கம் அடைந்தார். இறுதியில் இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானது.

வாழ்நாள் முழுவதும் அகிம்சையை போதித்த காந்தியின் உயிர் ஒரு துப்பாக்கி குண்டால் பறிபோனது. 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் திகதி டில்லியில் வைத்து நாதுராம் கோட்சே என்பவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிகளும், வாளும், வேலும் சாதிக்க முடியாததை தன் அறவழி போராட்டங்களால் சாதித்துக் காட்டினார். மனஉறுதிக்கும் போராட்ட குணத்திற்கும் இன்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுபவர் மகாத்மா காந்தி ஆவார்.

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.