டிரம்ப், பைடனின் விவாதத்தை கட்டுப்படுத்த புதிய விதிமுறை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே நடைபெறவிருக்கும் 2ஆவது அரசியல் விவாதத்தில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒருவர் பேசும்போது மற்றவரது ஒலிபெருக்கியின் செயல்பாட்டை முடக்கும் ‘மியுட்’ பொத்தான் அறிமுகம் செய்யப்படுகிறது.

முதல் விவாதத்தின்போது இருவருக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றம் சரிவர இல்லை. அதைத் தவிர்க்க, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் துறை புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது.

அதன் மூலம், ஒவ்வொரு வேட்பாளரும் முதல் இரண்டு நிமிடங்களுக்கு எந்தக் குறுக்கீடும் இல்லாமல் தாராளமாகப் பேச முடியும்.

ஒருவர் மற்றவர் பேசுவதற்கு அளிக்கப்படும் நேரத்தை மதித்து நடப்பார்கள் என நம்புவதாகத் தேர்தல் துறை குறிப்பிட்டது. கடந்த செப்டெம்பரில் இருவரும் விவாதத்தில் ஈடுபட்டபோதும் டிரம்ப் 71 தடவை பைடனின் பேச்சை இடையூறு செய்ததோடு முன்னாள் துணை ஜனாதிபதியான பைடன் 22 தடவைகள் டிரம்புக்கு இடையுறு செய்தார்.

இறுதிநேர விதிமுறை மாற்றங்கள் இருந்தாலும் பைடனுடன் விவாதிக்க டிரம்ப் தயாராக உள்ளார் என்று அவரது நிர்வாகம் தெரிவித்தது. இரு வேட்பாளர்களும் கடந்த வியாழக்கிழமை இரண்டாவது தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபடவிருந்தனர். எனினும் டிரம்புக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த விவாதத்தை ஒன்லைன் விவாதமாக வைப்பதற்கு விவாதத்திற்கு பொறுப்பான ஆணைக்குழு தீர்மானித்தது. எனினும் டிரம்ப் அதனை நிராகரித்தார். இதனால் இருவரும் தனித்தனியே தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினர்.

இந்நிலையில் வரும் வியாழக்கிழமை இருவரும் கடைசி விவாதத்தில் பங்கேற்கவுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கருத்துக் கணிப்புகளின்படி ஜோ பைடன் சிறு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார்.

Wed, 10/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை