தொடரும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்

தாய்லாந்தில் இடம்பெற்றுவரும் அமைதியான ஆர்ப்பாட்டங்களை முடக்கும் வகையில் அந்நாட்டு அரசு அவசரநிலை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பெரும் ஒன்று கூடல்களுக்கு தடைவிதித்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த உத்தரவு, “அமைதி, ஒழுங்கை பேணுவதற்கு அவசியமானது” என்று தொலைக்காட்சி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் தலைமையிலான இந்த ஜனநாயக அமைப்பு பிரதமரை பதவி விலகும்படியும் மன்னரின் அதிகாரங்களை குறைக்கும்படியும் கோரி கடந்த மூன்று மாதங்களாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.

நேற்றுக் காலையும் முன்று முக்கிய ஆர்ப்பாட்டத் தலைவர்கள் உட்பட பல செயற்பாட்டாளர்களை பொலிஸார் கைது செய்தனர்.

கடந்த புதன்கிழமை தலைநகர் பாங்கொக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தி அரச இல்லம், பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் முகாமிட்டனர். 2014 இராணுவ சதிப்புரட்சியில் அதிகாரத்தை கைப்பற்றிய முன்னாள் இராணுவத் தளபதி பிரயுத் சான் ஒசாவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோன்று நீண்ட காலமாக இருந்து வந்த சமூகத் தடையை மீறி மன்னர் மஹா வஜிராலங்கோர்னின் அதிகாரங்களை குறைத்து புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

தாய்லாந்து சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் செல்வாக்கு செலுத்தி வரும் மன்னர் குடும்பத்திற்கு எதிராக இவ்வாறு சவால் விடுக்கப்படுவது முன்னர் நிகழாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Fri, 10/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை