Header Ads

திருத்தியமைக்கப்பட்ட லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் போட்டி அட்டவணை

லங்கா ப்ரீமியர் லீக் ரி 20 தொடரின் போட்டி அட்டவணை இலங்கை கிரிக்கெட்டால் (27) திருத்தியமைக்கப்பட்ட நிலையில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்த எதிர்பார்க்கப்பட்ட லங்கா ப்ரீமியர் லீக் தொடர், கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் , இந்த தொடருக்காக 23 மோதல்கள் கொண்ட போட்டி அட்டவணையினையும் வெளியிட்டிருந்தது.

இவ்வாறு வெளியிடப்பட்ட போட்டி அட்டவணையே தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வெளியிடப்பட்டிருக்கின்றது. தற்போதைய அட்டவணையின் படி முன்னர் போன்றே எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 14ஆம் திகதி வரை லங்கா ப்ரீமியர் லீக் தொடர் கண்டி, ஹம்பாந்தோட்டை ஆகிய இரண்டு இடங்களில் மாத்திரம் நடைபெறுகின்றது. ஆனால், சில குழுநிலைப் போட்டிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தற்போதைய போட்டி அட்டவணையின் அடிப்படையில், தொடரின் முதல் போட்டி தம்புள்ளை ஹோக்ஸ் மற்றும், கொழும்பு கிங்ஸ் அணிகள் ஆகியவை இடையே, தொடரின் அறிமுக நிகழ்வுடன் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது.

இதன் பின்னர், நவம்பர் 28ஆம் திகதி வரை லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் குழுநிலைப் போட்டிகள் யாவும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்திலேயே நடைபெறவிருக்கின்றன. இதில், தொடரின் முதல் நாள் தவிர்த்து நவம்பர் 28ஆம் திகதி வரை ஒவ்வொரு நாளும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இரண்டு குழுநிலை மோதல்கள் இடம்பெறவிருக்கின்றன.

பின்னர், மூன்று நாட்கள் கழித்து டிசம்பர் மாதம் 02ஆம் திகதி தொடக்கம் தொடரின் எஞ்சிய குழுநிலைப் போட்டிகளும், அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், குழுநிலைப் போட்டிகள் யாவும் டிசம்பர் மாதம் 09ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதுடன், தொடரின் முதல் அரையிறுதி டிசம்பர் மாதம் 10ஆம் திகதியும், இரண்டாவது அரையிறுதி டிசம்பர் மாதம் 11ஆம் திகதியும் இடம்பெறவிருக்கின்றன.

பின்னர், டிசம்பர் மாதம் 13ஆம் திகதி லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இடம்பெறவிருக்கின்றது. இந்த இறுதிப் போட்டிக்காக மேலதிக நாள் ஒன்றினையும் இலங்கை கிரிக்கெட் சபை ஒதுக்கி வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Thu, 10/29/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.