மலேசியாவில் ஆட்சி அமைப்பதற்காக அன்வர் இப்ராஹிம் மன்னருடன் சந்திப்பு

மலேசியாவில் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் உறுதியான மற்றும் வலுவான ஆதரவு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் அந்நாட்டு மன்னரை நேற்று சந்தித்து தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தற்போதைய பிரதமர் முஹ்யத்தீன் யாசினின் அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

222 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் தமக்கு 120 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அன்வர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக அன்வர் இப்ராஹிம் கூறிய நிலையின் அந்த எண்ணிக்கை தற்போதே வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கை மன்னர் அல் சுல்தான் அப்துல்லாவின் கைகளில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அன்வர் இப்ராஹிம், முஹ்யத்தீன் தமது பெரும்பான்மையை இழந்திருப்பதாகவும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“அரசியல் அமைப்பின் கீழ் மன்னர் தமது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அனைத்து தரப்புகளும் வழிவிட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்று இப்ராஹிம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்திய பின்னர், மன்னர் தமது முடிவை வெளியிடுவார் என்று அன்வார் கூறினார்.

மலேசியாவின் மன்னர் ஓர் அடையாளப் பதவியை வகித்தபோதும் பெரும்பான்மை ஆதரவை கருத்தில் கொண்டு பிரதமர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் அவரிடம் உள்ளது. பிரதமரின் ஆலோசனையில் பாராளுமன்றத்தை கலைக்கவும் புதிய தேர்தலை நடத்தவும் மன்னருக்கு முடியும்.

மஹதிர் மொஹமட் எதிர்பாராத நேரத்தில் பதவி விலகியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் புதிய பிரதமராக முஹியத்தீன் நியமிக்கப்பட்டார். எனினும் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு மத்தியில் மலேசியாவில் அதிகாரப் போட்டி நீடித்து வருகிறது.

குறிப்பாக 73 வயதான அன்வர் இப்ராஹிம் 22 ஆண்டுகளாக பிரதமர் பதவிக்கான எதிர்பார்ப்புடன் உள்ளார். எனினும் மஹதிர் மொஹமட்டுடனான அரசியல் மோதலுக்கு மத்தியில் 10 ஆண்டுகள் அவர் சிறை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 10/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை