தவானின் சதம் வீண்: டெல்லியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 38ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷாப் பந்த் ஆகியோர் தலா 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பாக மொஹமட் சமி 2 விக்கெட்களையும், மக்ஸ்வெல், ஜேம்ஸ் நீஷம் மற்றும் முருகன் அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனை அடுத்து 165 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை மாத்திரமே இழந்து 167 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

அவ்வணி சார்பாக நிக்கோலஸ் பூரன் 53 ஓட்டங்களையும் க்ளென் மக்ஸ்வெல் 32 ஓட்டங்களையும் கிறிஸ் கெய்ல் 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் டெல்லி கெபிடல்ஸ் அணி சார்பாக காகிசோ ரபாடா 2 விக்கெட்களையும், அக்சர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியை அடுத்து விளையாடிய 10 போட்டிகளில் 4 வெற்றி 6 தோல்விகளுடன் 8 புள்ளிகளை பெற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் டெல்லி கெபிடல்ஸ் அணி விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றி 3 தோல்விகளுடன் 14 புள்ளிகளை பெற்று தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் தவான் புதிய சாதனை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசி ஷிகர் தவான் புதிய சாதனை படைத்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஷிகர் தவான், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார்.

அதேபோல், ஒரு ஐ.பி.எல். தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் அடிக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார். ஒரு ஐ.பி.எல். தொடரில் 4 சதங்களை விராட் கோலி விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thu, 10/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை