தாய்வானுக்கு ஏவுகணை விற்க அமெரிக்கா முடிவு

அமெரிக்கா 2.4 பில்லியன் டொலர் மதிப்புள்ள 100 ஹார்பூன் கடலோரத் தற்காப்பு ஏவுகணை அமைப்பைத் தாய்வானுக்கு விற்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

அந்த ஒப்பந்தம் சீனாவுக்கு மேலும் சினமூட்டக்கூடும். ஹார்பூன் ஏவுகணை அமைப்பு தாய்வானின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, அதன் அரசியல் நிலைத்தன்மை, இராணுவச் சமநிலை ஆகியவற்றை நிர்வகிக்க உதவும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள அறிக்கை குறிப்பிட்டது.

125 கிலோமீற்றர் தூரம் வரை பாய்ச்சக் கூடிய ஏவுகணைகளை அந்த அமைப்பு உள்ளடக்கியிருக்கும்.

போயிங் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் அந்த ஏவுகணைகளை கனரக வாகனங்களிலோ, நிலையான தளங்களிலோ பொருத்தலாம்.

ஜனநாயக முறையில் இயங்கும் தாய்வானைச் சீனா தொடர்ந்து தனது அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியாகவே பார்க்கிறது. அதனால் தாய்வான் தொடர்ந்து சீனாவின் ஆதிக்க அச்சுறுத்தலை எதிர்நோக்கிவருகிறது.

தாய்வானுக்கு ஆயுத விற்பனை செய்யும் அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மீது தடைகளை விதிக்கப்படும் என்று சீனா கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.

Wed, 10/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை