டிரம்பிடமிருந்து கொரோனா தொற்றும் அபாயம் இல்லை

வெள்ளை மாளிகை மருத்துவர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் இருந்து ஏனையவர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் இல்லை என்று வெள்ளை மாளிகை மருத்துவர் சேன் கொன்லி தெரிவித்துள்ளார்.

நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு நிலையத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஜனாதிபதி பாதுகாப்பான முறையில் தனிமைப்படுத்திக்கொள்வதை நிறுத்திக்கொள்ளலாம் என்று மருத்துவர் எழுதிய கடிதம் குறிப்பிட்டது.

ஜனாதிபதி மீது புதிதாக செய்யப்பட்ட சோதனையில் அவரது உடலில் வைரஸ் பிரதி எடுக்கும் செயற்பாடு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் வைரஸ் அளவு குறைந்து வருவதாகவும் மருத்துவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனனும் அவரின் உடலில் இன்னும் வைரஸ் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி அந்தக் கடிதத்தில் தெளிவாகக் கூறப்படவில்லை.

இந்நிலையில் வைரஸ் தொற்றுக்காக மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின் முதல் முறையாக கடந்த சனிக்கிழமை வெள்ளை மாளிகையில் ஆரவாரிக்கும் தமது ஆதரவாளர்களை டிரம்ப் சந்தித்தார்.

வெள்ளை மாளிகை மாடத்தில் நின்று உரையாற்றிய டிரம்ப், ஒருசில நொடிகளிலேயே முகக்கவசத்தை அகற்றினார். தாம் நலமாக இருப்பதாகவும் கொவிட்–19 நோய்க்காக தொடர்ந்தும் மருந்து எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூட்டத்தின் முன் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள வேளையில் டிரம்ப் மீண்டும் மும்முரமான பிரசாரத்துக்குத் தயாராகிவருகிறார்.

Mon, 10/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை