ஐரோப்பாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பாதிப்பு தீவிரம்

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் பிரான்ஸ் நாட்டு மக்களில் முன்றில் ஒரு பங்கினருக்கு உரடங்குச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டிருப்பதோடு, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள பெல்ஜியம் வெளியுறவு அமைச்சர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் எட்டு நகரங்களுக்கு கடந்த வாரம் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அது மேலும் 38 பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜீன் கஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். இதன்படி அந்நாட்டின் 67 மில்லியன் மக்கள் தொகையில் 46 மில்லியன் பேர் இரவு நேர ஊரடங்குச் சட்டத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

“இரண்டாம் அலை கொரோனா தொற்று பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் தற்போது இடம்பெற்று வருகிறது. நிலைமை மிகத் தீவிரமாக உள்ளது” என்று கஸ்டெக்ஸ் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பிரான்ஸில் 41,622 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி மொத்த தொற்றுச் சம்பவங்கள் 999,043ஆக அதிகரித்த நிலையிலேயே இந்த புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை இதுவரை இல்லாத எண்ணிக்கையாக ஒரே நாளில் உலகில் 423,290 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் முதல் நாடாக ஒரு மில்லியன் கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவான ஸ்பெயினில், இந்த வைரஸ் கட்டுப்பாட்டை இழந்து பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் சல்வாடோர் இலா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் முதலாவது கொரோனா அலை பாதிப்பின்போது கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடும் முடக்கநிலை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வந்த இந்த வைரஸ் கடந்த ஒருசில வாரங்களில் ஐரோப்பாவை மீண்டும் மையமாகக் கொண்டுள்ளது.

மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தற்போதைய நிலையில் சுகாதார கட்டமைப்பை விஞ்ஞாதபோதும் நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் தினசரி தொற்றுச் சம்பவங்கள் முதல்முறை 10,000 க்கு மேல் அதிகரித்திருக்கும் சூழலில் சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, போலந்துடன் இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவில் பெரும் பகுதிகளுக்கு பயணிப்பதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஐரோப்பா பிராந்தியத்தில் 5.3 மில்லியன் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 204,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக தொற்றுநோய் தடுப்பும் மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் குறிப்பிட்டுள்ளது.

இதுவே உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 8.4 மில்லியன் தொற்றுச் சம்பவங்களும் அடுத்துள்ள இந்தியாவில் 7.7 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெல்ஜியம் வெளியுறவு அமைச்சர் சொபியா வில்ம்ஸ் கடந்த வியாழக்கிழமை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மறுபுறம் ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜேன்ஸ் ஸ்பாஹ்னுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Sat, 10/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை