இந்த ஆண்டு எங்களுக்குரியது இல்லை: ‘நாங்கள் திறமைக்கு தகுந்தபடி செயல்படவில்லை’

சென்னை அணி தலைவர் டோனி

இந்த ஆண்டு எங்களுக்குரியதாக இல்லை. நாங்கள் திறமைக்கு தகுந்தபடி செயல்படவில்லை’ என்று சென்னை அணியின் தலைவர் டோனி தெரிவித்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சம்பியனான சென்னை சூப்பர் கிங்சை பந்தாடியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி வெறும் 114 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த இலக்கை மும்பை அணி 12.2 ஓவர்களில் எட்டி பிரமாதப்படுத்தியது.

ஐ.பி.எல். வரலாற்றில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி பணிந்தது இதுவே முதல்முறையாகும். 8-வது தோல்வியை சந்தித்த சென்னை அணி, ‘பிளே-ஓப்’ சுற்று வாய்ப்பை முதல்தடவையாக பறிகொடுத்துள்ளது. 4 ஓவர்களில் 18 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்த மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்விக்கு பிறகு டோனி கூறியதாவது:-

இந்த தோல்வி எங்களது மனதை காயப்படுத்துகிறது. என்ன தவறுகள் நடந்து இருக்கிறது என்பதை நாங்கள் பார்க்க வேண்டியது அவசியமானதாகும். இந்த ஆண்டு எங்களுக்குரியதாக இல்லை. இதுவரை ஒன்றிரண்டு ஆட்டங்களில் மட்டுமே பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட்டுள்ளோம். தற்போதைய நிலையால் (புள்ளி பட்டியலில் கடைசி இடம்) எல்லா வீரர்களும் வேதனையில் உள்ளனர். வீரர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சித்தனர். எப்போதும் எல்லா விஷயங்களும் நாம் நினைத்தது மாதிரி நடந்து விடாது.

இந்த தொடரில் 2-வது ஆட்டத்தில் எங்களது பந்துவீச்சு சரியாக அமையவில்லை. அதன் பிறகு துடுப்பாட்டம் சொதப்பியது. அம்பத்தி ராயுடு காயம் அடைந்தார். எஞ்சிய துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்படாததால் துடுப்பாட்ட வரிசையில் நெருக்கடி ஏற்பட்டது. எப்போதெல்லாம் நல்ல தொடக்கம் கிடைக்கவில்லையோ அது மத்தியவரிசை துடுப்பாட்டம் கடினமாக்கியது. கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் அணி கடினமான சூழ்நிலையில் பயணிக்கும் போது, ஆட்டம் சாதகமாக அமைய சற்று அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். ஆனால் இந்த சீசனில் அதிர்ஷ்டம் எங்களுக்கு கைகொடுக்கவில்லை. முதலில் துடுப்பெடுத்தாட விரும்பிய ஆட்டங்களில் நாணயச்சுழற்சியில் தோற்றோம். நாங்கள் எப்போதெல்லாம் 2-வது துடுப்பாட்டம் செய்தோமோ, அப்போது பனிப்பொழிவு (பனிப்பொழிவு இருந்தால் ஈரப்பதத்தில் பந்து வீச சிரமமாக இருக்கும். துடுப்பாட்டவீரர்கள் எளிதில் ஓட்டங்கள் குவிக்க முடியும்) அதிகமாக இல்லை. ஆனால் நாங்கள் முதலில் துடுப்பெடுத்தாடும் சமயத்தில் களத்தில் திடீரென நிறைய பனி கொட்டுகிறது.

நீங்கள் நன்றாக ஆடாத போது நூறு காரணங்கள் சொல்ல முடியும். ஆனால் உங்கள் திறமைக்கு தகுந்தபடி விளையாடினீர்களா? என்று உங்களை நீங்களே கேட்க வேண்டியது தான் முக்கியமானதாகும். ஆடும் லெவனில் இடம் பெறும் வீரர்கள் தங்கள் திறமையை களத்தில் பிரதிபலிக்க வேண்டியது அவசியமானதாகும். ஆனால் அதனை இந்த முறை நாங்கள் சரியாக செய்யவில்லை. 3-4 துடுப்பாட்டவீரர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக எல்லாம் கடினமாகி விடும்.

தோல்வியால் வேதனை அடைந்தாலும் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாமலும், அது வீரர்கள் ஓய்வறையை பாதிக்காத வகையிலும் பார்த்து கொள்ள வேண்டும். எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் எங்களுடைய பெருமைக்காவது வெற்றி பெற்று மோசமான நிலைமையை மாற்றுவோம் என்று நம்புகிறோம்.

அடுத்த ஆண்டு போட்டிக்கு தெளிவான திட்டத்துடன் இருக்க வேண்டியது அவசியமானதாகும். எஞ்சிய ஆட்டங்களை அடுத்த ஆண்டு போட்டிக்கு தயாராகுவதற்கு அடித்தளமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களின் திறமையை அடையாளம் காண வேண்டும். கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி விட முடியாது. எல்லா ஆட்டங்களிலும் விளையாடுவேன். இவ்வாறு டோனி கூறினார்.

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை