அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமும் இல்லாத நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் பதவியில் உள்ள ஜனாதிபதியான குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இறுதிக் கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசு கட்சி ஆதரவு மாநில ங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பைடன், டிரம்பை ஏமாற்றுக்காரர் என்று சாடியுள்ளார். டிரம்ப் கொரோனா வைரஸிடம் சரணடைந்திருப்பதாக ஜோர்ஜியாவில் அவர் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு தாம் வெற்றிபெற்ற ஆனால் தேர்தலில் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மாநில ங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப், பைடன் வெற்றிபெற்றால் பொருளாதாரம் பாதிப்படையும் என்று மிச்சிகனில் குறிப்பிட்டார்.

கருத்துக்கணிப்புகளின்படி டிரம்ப்பை விடவும் பைடன் முன்னிலையில் உள்ளார்.

எனினும் அரிசோனா, புளோரிடா மற்றும் வடக்கு கரோலினா போன்ற தீர்க்கமான மாநிலங்களில் தொடர்ந்தும் கடும் போட்டி இருந்து வருகிறது.

ஏற்கனவே 69 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் முன்கூட்டியே தேர்தலில் வாக்களித்துள்ளனர். கொரோனா தொற்றுக் காரணமாக முன்கூட்டி வாக்களிப்போர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் ஜோர்ஜியா மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரது தன்னம்பிக்கையை அது காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். 1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜோர்ஜியா மாநிலம் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியை ஆதரித்ததில்லை.

ஆனால் இம்முறை அங்கு கடுமையான போட்டி நிலவும் என்று கருத்துக் கணிப்புகள் முன்னுரைத்துள்ளன.

மிச்சிகன், விஸ்கோன்சின், நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்களில் ஜனாதிபதி டிரம்ப் தமது பிரசாரத்தை வலுப்படுத்தியுள்ளார்.

பென்சில்வேனியா மாநிலத்தில் ஜனாதிபதியின் துணைவியார் மெலானியா டிரம்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தனியாகப் பிரசாரத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறையகும்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Thu, 10/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை