கொரோனா காரணமாக மீன்பிடித்துறை வீழ்ச்சியடைய இடமளிக்க முடியாது

மாற்று வழிகளை கண்டறிய சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்பு

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி நிலை காரணமாக நாட்டின் முக்கியமான தொழில் துறையான மீன்பிடித்தொழில் வீழ்ச்சி அடைவதற்கு இடமளிக்க முடியாது எனவும் மீனவ துறைமுகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட சுகாதார வழிகாட்டல்களை தயாரித்து நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 20 முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள் செயற் பட்டு வரும் நிலையில் அவை தற்போதுள்ள சூழ்நிலையில் பேலியகொடை மொத்த மீன் சந்தையுடன் வர்த்தகதொடர்புகளை மேற்கொள்ள முடியாதுள்ள தாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க பேலியகொட மொத்த மீன் வர்த்தக சந்தையுடன் தொடர்புகளை வைத்திருந்த காலி,பேருவளை மற்றும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில் பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 32 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 21 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் கடற்தொழிலில் ஈடுபட்டு ள்ள நிலையில் 3 லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீன்கள் அந்த மீன்பிடி படகுகளில் தற்போது உள்ளதாகவும் அமைச்சின் அதிகாரிகள் சுகாதார அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். அது தொடர்பில் தெரிவித்துள்ள அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, மேற்படி அனைத்து மீன்களையும் நுகர்வோரின் கைகளுக்கு கிடைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறும் அதற்காக விசேட திட்டமொன்றை செயற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கிணங்க அது தொடர்பில் விசேட சுகாதார வழிமுறைகள் தயாரிக்கப்பட்டு இன்றைய தினம் அமைச்சினூடாக மீன்பிடி துறைமுகங்களுக்கு அவற்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 10/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை