தனிமைப்படுத்தலுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்ைக

கொரோனா பரவலை தடுக்க சகல தரப்பும் கடும் பிரயத்தனம்

பிரதிப்பொலிஸ் மாஅதிபர் அஜித்ரோஹண எச்சரிக்ைக

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,​

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்ல கம்பஹா மாவட்டத்தில் பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு வருகின்றனர்.

தனிமைப்படுத்தலுக்கு வராது ஒளிந்திருப்பவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஊழியர்கள் வேறு பிரதேசங்களில் இருக்கின்றமை தொடர்பில் எமக்கு தரவுகள் கிடைத்திருந்தன. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் வேறு பிரதேசங்களில் இருந்தால்  உடனடியாக கம்பஹா மாவட்டத்தில் பொலிஸாரினால் அடையாளப்படுத்த இடங்களுக்கு வருகைத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். குறிப்பிட்ட இடங்களுக்கு வருகைத்தர வேண்டும். வருகைத்தராதவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடந்துக்கொண்டுள்ளதாக கருதி அவர்களுக்கு எதிராக கடுமையாகச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலிலுள்ளது. அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வது முற்றாக தடைச் செய்யப்பட்டுள்ளது. நேற்றுக்காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 79 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய 18 மோட்டார் சைக்கிள்களும் ஒரு முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை , சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது , அதற்கு எதிர்ப்பை தெரிவித்து அவர்களது நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளின் ஊடாக பொதுப்போக்குவரத்து சாதனங்கள் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் . இதேவேளை அந்த பகுதிகளில் ஆட்களை ஏற்றுவதோ , இறக்குவதோ தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார தேவைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு செல்வார்களுக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் அவசியமில்லை.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் காணப்படும் நபர்கள் வெளியில் செல்லாது , அவர்களின் வீடுகளில் இருந்துக் கொண்டே அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய சேவை பெற்றுக் கொடுக்கப்படும். அதேவேளை , வீடுகளில் உள்ளவர்கள் தமது வீட்டை அண்டிய பகுதிகளை சுத்தம் செய்யவதில் எந்த பிரச்சினையும் இல்லை . மாறாக குழுக்களாக கூடி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுப்படக்கூடாது. இது போன்ற செயற்பாடுகள் முற்றாக தடைச் செய்யப்பட்டுள்ளன.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 10/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை