அம்பாறையில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு விழா

45வது தேசிய மற்றும் 13வது தெற்காசிய விளையாட்டு விழாக்களில் பதக்கங்களை வென்று, கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் வர்ண கௌரவிப்பு விழா அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் என்.எம்.நௌபீஸின் அழைப்பின் பேரில், கிழக்கு மாகாண கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முதுபண்டா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பிரதம அதிதியாகவும், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ, கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை மாவட்டச் செயலாளர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்க, திருகோணமலை மாவட்டச் செயலாளர் அசங்க அபேவர்த்தன, கிழக்கு மாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் விஷேட அதிதிகளாக விழாவில் கலந்து சிறப்பித்ததுடன் விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளையும் வழங்கி வைத்தனர்.

இதன்போது, 45வது தேசிய விளையாட்டு விழாவில் 08 தங்கப் பதக்கங்கள், 06 வெள்ளிப் பதக்கங்கள், 10 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 24 பதக்கங்களைப் பெற்றுக் கொண்ட வீர, வீராங்கனைகள் விருது வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், 13வது தெற்காசிய விளையாட்டு விழாவில், கிழக்கு மாகாணம் சார்பாக பங்குபற்றி, 04 தங்கப் பதக்கங்கள 03 வெள்ளிப் பதக்கங்கள், 05 வெண்கலப் பதக்கங்கள் உள்ளிட்ட மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்றுக் கொண்ட வீர, வீராங்கனைகள் தமக்கான விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும், மாகாணமட்ட சாதனைகளை முறியடித்த 08 வீர, வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு வீரர்களைப் பயிற்றுவித்து, வெற்றிக்கு காலாக அமைந்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களும் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில், விளையாட்டுத் திணைக்கள அதிகாரிகள். உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் என அதிகமானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Sat, 10/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை