மன்னாரில் 902 கி.கி. மஞ்சளுடன் இருவர் கைது

மன்னார், தாழ்வுப்பாடு பிரதேசத்தில் சுமார் 902 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கைது நேற்று (02) இடம்பெற்றுள்ளது.

வடமத்தி கடற்படை கட்டளை பிரிவினரால் குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது,  கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான படகொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, அப்படகிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 19 சாக்குப் பைகளில் பொதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உலர்ந்த மஞ்சள் மற்றும் டிங்கி படகுடன்  குறித்த படகிலிருந்த இருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னார், புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 22, 48 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள மஞ்சள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர்கள் தனிமைப்படுத்தலுக்காக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

சந்தேகநபர்களின் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த பின்னர், அவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Sat, 10/03/2020 - 14:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை