உலக கொரோனா தொற்று 40 மில்லியனாக அதிகரிப்பு

நோய் பரவல் வேகம் நாளுக்கு நாள் உயர்வு

உலகெங்கும் கொரோனா தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று 40 மில்லியனைத் தொட்டிருப்பதாக ரோய்ட்டர்ஸ் புள்ளிவிபரம் காட்டுகிறது. பூமியின் வடக்கு பகுதியில் குளிர்காலம் ஆரம்பித்திருக்கும் நிலையில் அங்கு வைரஸ் பரவலும் வேகமடைந்துள்ளது.

தனிப்பட்ட நாடுகளின் உத்தியோகபூர்வ அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே ரோய்ட்டர்ஸின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. எனினும் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை உத்தியோகபூர்வ எண்ணிக்கைகளை விடவும் பல மடங்கு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

சில நாடுகள் குறைவான சோதனை மற்றும் எண்ணிக்கையை குறைத்து அறிவிக்கின்றன என்று குற்றம்சாட்டப்படுகிறது.

எனினும் ரோய்ட்டர்ஸ் புள்ளிவிபரத்தின் படி கொரோனா தொற்று வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிகிறது. உலக கொரோனா தொற்று 30 மில்லியனில் இருந்து 40 மில்லியனைத் தொட 32 நாட்கள் எடுத்துள்ளது. அது 20 மில்லியனில் இருந்து 30 மில்லியனைத் தொடுவதற்கு 38 நாட்களும் 10 மில்லியனில் இருந்து 20 மில்லியனைத் தொட 44 நாட்களும் எடுத்துக் கொண்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஜனவரி ஆரம்பத்தில் முதல் கொரோனா சம்பவம் அறிவிக்கப்பட்டு அது 10 மில்லியனை எட்டுவதற்கு மூன்று மாதங்கள் சென்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளில் அதிகபட்ச நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை பதிவாகி இருந்தது. அப்போது முதல் முறை புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் 400,000 ஐ தாண்டியது.

கடந்த வாரத்தில் உலகெங்கும் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 347,000 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இதுவே ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நாளைக்கு 292,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளும் தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன. உலக நோய்த் தொற்று சம்பவங்களில் 47.27 வீதமானது வடக்கும், மத்திய மற்றும் தென் அமெரிக்க பிராந்தியங்களிலேயே பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் 10,000 பேருக்கு சுமார் 247 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்தியா மற்றும் பிரேசிலில் அந்த எண்ணிக்கை 10,000 பேருக்கு முறையே 55 மற்றும் 248 சம்பவங்களாகும்.

மறுபுறம் ஐரோப்பாவில் புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் நாளுக்கு 150,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து, உக்ரைன், சைப்ரஸ் மற்றும் செக் குடியரசு உட்பட பல நாடுகளிலும் நாளாந்த புதிய தொற்று சம்பவங்கள் முன்னர் இல்லாத அளவு அதிகரித்துள்ளன.

உலக தொற்றுச் சம்பவங்களில் ஐரோப்பாவில் 17 வீதமானது பதிவாகி இருப்பதோடு உயிரிழப்பில் அது 22 வீதமாக உள்ளது.

வைரஸை கட்டுப்படுத்த பிரிட்டனில் முக்கிய பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரான்சில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பதோடு ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டு அறுவைச்சிகிச்சைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் ஈரானில் உயிரிழப்பு 30,000க்கு மேல் அதிகரித்திருப்பதோடு தலைநகர் டெஹ்ரான் மூன்றாவது வாரமாகவும் மூடப்பட்டுள்ளது.

இந்தப் பெருந்தொற்று ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் 1.1 மில்லியன் பேர் உலகெங்கும் உயிரிழந்துள்ளனர். இது மொத்த நோய்த் தொற்று சம்பவங்களில் 2.8 உயிரிழப்பு வீதமாகும்.

பரந்த அளவில் தடுப்பு மருந்து ஒன்று பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் உயிரிழப்பு எண்ணிக்கை 2 மில்லியன் என இரட்டிப்பாகக் கூடும் என்றும் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அகதிகரிக்கக் கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை