பதவி விலக தாய்லாந்து பிரதமருக்கு 3 நாள் கெடு

தாய்லாந்தில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பாரிய ஆர்ப்பாட்டங்களை தவிர்க்க தவறிய நிலையில் பொது ஒன்றுகூடல்களுக்கான தடை அகற்றப்பட்டுள்ளது.

“தீவிர நிலைமையை’ தணிப்பதற்காக இந்த நடவடிக்கைகள் அகற்றப்படுவதாக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பிரயுத் சான் ஒசாவுக்கு பதவி விலக ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று நாள் கெடு விதித்திருக்கும் நிலையிலேயே அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மற்றும் அந்நாட்டு மன்னரை இலக்கு வைத்து தாய்லாந்தில் கடந்த சில மாதங்களாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சிக்கு தலைமை வகித்தவரும் கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய தேர்தலுக்கு பின்னர் பிரதமர் பதவியை ஏற்றவருமான சான் ஒசாவை பதவி விலகும்படி மாணவர்கள் தலைமையிலான அமைப்பே கோரி வருகிறது. அவர் புதிய தேர்தலை நடத்தவும், அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரவும், அரசை விமர்சிப்பவர்கள் மீது இடம்பெறும் தொந்தரவுகளை முடிவுக்குக் கொண்டுவரவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

அதேபோன்று மன்னரின் அதிகாரத்தை குறைப்பதற்கும் அவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மன்னருக்கு சட்டத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் முன்னர் நிகழாத ஒன்றாக மன்னர் மீதான விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையொட்டி ஜனநாயக ஆதரவாளர்களால் தலைநகர் பாங்கொக்கில் அன்றாடம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

Fri, 10/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை