ராஜஸ்தானை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா திரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது

ஐபிஎல் கிரிக்கெட்டின் 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. ராஜஸ்தான் ரோயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

சுனில் நரைன் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ராணா ஷுப்மான் கில் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

10-வது ஓவரின் கடைசி பந்தில் நிதிஷ் ராணா 22 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மான் கில் 34 பந்தில் 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அந்த்ரே ரஸல் 24 ஓட்டங்களிலும், தினேஷ் கார்த்திக் 1 ஓட்டங்களில் ஆட்டமிழக்க கொல்கத்தாவின் ஓட்ட விகிதம் குறைய ஆரம்பித்தது. 6-வது வீரராக களம் இறங்கிய மோர்கன் 23 பந்தில் 34 ஓட்டங்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் அடித்துள்ளது.

ஜோஃப்ரா ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில்18 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து, 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர்.

7 பந்துகள் ஆடிய ஸ்மித் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் பட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சஞ்சு சம்சங் 9 பந்து வீச்சில் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சற்று நிதானமாக ஆடிய பட்லர் 16 பந்தில் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இதனால், 14.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் அணியின் டாம் கரன் 36 பந்துகளில் 3 சிக்சர்கள் உட்பட 54 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 137 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை