2 ஆவது சுப்பர் ஓவரில் பஞ்சாப் த்ரில் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐ.பி.எல் டி20 லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2ஆவது சுப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியும் மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது.

மும்பை இன்னிங்ஸை ரோகித், டி கொக் இணைந்து ஆரம்பித்தனர். ரோகித் 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த சூர்யகுமார் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இஷான் கிஷண் 7 ஒட்டத்துடன் வெளியேறி ஏமாற்றமளிக்க, மும்பை அணி 5.1 ஓவரில் 38 ஒட்டங்களுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், டி கொக் மற்றும் குருணல் பாண்டியா ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 58 ஓட்டங்களை சேர்த்தது. குருணல் 34 ஓட்டங்கள் விளாசி ரவி பிஷ்னோய் பந்து வீச்சில் ஹூடா வசம் பிடிபட்டார்.

39 பந்தில் அரை சதம் அடித்த டி கொக் 53 ஓட்டங்கள் விளாசி ஜோர்டன் பந்துவீச்சில் அகர்வாலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் போலார்ட்–கோல்டர் நைல் ஜோடி பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ள, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் குவித்தது.

போலார்ட் 34 ஓட்டம், கோல்டர் நைல் 24 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ஷமி, அர்ஷ்தீப் தலா 2, ஜோர்டன், பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

மும்பை அணிக்கு கடைசி 3 ஓவரில் 54 ஓட்டங்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அணித்தலைவர் கே.எல் ராகுல் 77 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 6 விக்கெட் இழப்பு பஞ்சாப் அணி 176 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி டையானது.

இதையடுத்து நடந்த சுப்பர் ஓவரில் 2 அணிகளும் தலா 5 ஓட்டங்கள் எடுத்ததால் 2ஆவது சுப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது.

இதில் மும்பை அணி 1 விக்கெட் இழந்து 11 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 15 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் கேயில் 7 ஓட்டங்கள், அகர்வால் 8 ஓட்டங்கள் அடித்தார்.

Tue, 10/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை