20ஆவது திருத்தத்திற்கு எதிராக சகலரும் ஒன்றிணைய வேண்டும்

தமிழ் எம்.பிக்களை கோருமாறு மக்களுக்கு அழைப்பு

20 ஆவது அரசியலமைப்பை எதிர்த்து வாக்களிக்குமாறு சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும். அத்துடன், 20ஆவது திருத்த சவாலை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற “இலங்கையில் அரசியலமைப்பின் 20வது திருத்தம்” ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,  20வது அரசியலமைப்பு திருத்தம் ஏன் இவ்வளவு அவசரமாக கொண்டு வரப்படுகின்றது என்பதற்கான பதில் என்னிடம் இருக்கின்றது.

ஏதிர்வரும் நவம்பர் மாதம் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் காலம் நிறைவடைகின்றது. நிறைவடைந்த பின்னர், தற்போதுள்ள அரசியலமைப்பின் படி புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமது கட்சி சார்ந்தவர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்க முடியும் என்பதற்காக இந்த அவசர நடவடிக்கைகள் எடுப்பதாக குற்றஞ்சாட்டினார். நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல்கள் கடந்த சில காலங்களில் நடந்திருந்தன.

20வது திருத்தம் எமது ஜனநாயகத்திற்கு விரோதமானது. 19வது திருத்தத்தை அகற்றுவோம் என்பதற்கும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை வலுவானதாக்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

ஓட்டுமொத்தமாக, 20வது திருத்தத்தை எதிர்க்கும் மனநிலையில் தான் இருக்கின்றார்கள். அது நல்ல விடயம். இதில் எமது எதிர்ப்பு பல மட்டங்களில் இருக்க வேண்டும். 20வது திருத்தம் நிறைவேற்றப்படுவதை தவிர்ப்பதற்கு, நாங்கள் பலமாக செயற்பட வேண்டும். 20வது திருத்த சட்டத்தை எதிர்ப்பதற்கு அரசாங்கத்துடன், அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் தமிழ் மக்கள் கோரிக்கை முன்வைக்க வேண்டும்.

எமது பிரதேசங்களில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். புதிய அரசியலமைப்பு இந்த நாட்டிற்குத் தேவையானது. ஆனால், புதிய அரசியலமைப்பை புறந்தள்ளி, 20வது திருத்தத்தை கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், புதிய அரசியலமைப்பு என்ற பேச்சுக்கே இடமளில்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். எமக்கான இனப்பிரச்சினை தீர்வுகள் உள்வாங்கப்பட வேண்டும்.

 

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Mon, 10/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை