நாளை முதல் பாடசாலைகளுக்கு 2ஆம் தவணை விடுமுறை!

- களனி பல்கலை,  விக்ரமாரச்சி ஆயுர்வேத கல்வியகம் பூட்டு
- மஹர, நீர்கொழும்பு சிறைகளை பார்வையிட தடை

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (05)  முதல் ஆரம்பமாகுவதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இரண்டாம் தவணை விடுமுறையை ஒக்டோபர் 09ஆம் திகதி வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், தற்போது நாட்டில் நிலவும் நிலைமையை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில், கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகள், தனியார் பிரத்தியேக வகுப்புகளுக்கும் நாளை (05) திங்கட்கிழமை முதல் வௌ்ளிக்கிழமை (09) வரை ஒரு வாரம் பாடசாலைகள் மூடப்படும் என கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் இரண்டாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறு, சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்தைக் கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துக் கத்தோலிக்க தனியார் பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை (05) முதல் மூடப்படுவதாக, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

அனைத்து முன்பள்ளிகளும் விடுமுறைக்காக நாளை முதல்  மூடப்பட வேண்டும் என, மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு பணித்துள்ளது.

இதேவேளை களனி பல்கலைக்கழகம், யக்கலவிலுள்ள விக்ரமாரச்சி ஆயுர்வேத கல்வியகம் நாளையிலிருந்து (05) ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடுவதும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Sun, 10/04/2020 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை