1022 பேருக்கு தொற்று உறுதி; PCR பரிசோதனைகள் தீவிரம்

பாதுகாப்பு முன்னேற்பாடாகவே ஊரடங்கு உத்தரவு

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 1,022 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை மாத்திரம் 314 பேருக்கு இங்கு கொவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இராணுவத் தளபதி நேற்றை நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளதுடன், திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர் பணியாற்றிய ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்களென அனைவருக்கும் கொவிட்19க்கான பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இங்குள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமைக்கான மூலக்காரணத்தை கண்டறிய தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படு வருவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஞாற்றுக்கிழமை திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது மகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையின் போது அவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டதால் கம்பஹா மாவட்டத்தில் காணப்படும் சில பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரங்குச் சட்டம் பிறபிக்கப்பட்டு பி.சீ.ஆர். பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு மேலதிகமாக சீதுவ பொலிஸ் பிரிவுக்கும் நேற்று முதல் மறுஅறிவித்தல்வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் கம்பஹா, கணேமுல்ல, கிரிந்திவெல, மல்வத்து ஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொடை, வேயாங்கொடை, வீரகுல, வெலிவேரிய, யக்கல, தொம்பே, மினுவங்கொடை, பல்லேவெல, களனி, ஜா – எல, கந்தான உள்ளிட்ட 18 பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும். இதேபோன்று தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் பிரவேசித்தல், அதேபோன்று பிரதேசத்தில் இருந்து வெளியேறுதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்து பஸ்கள் இந்த பிரதேசத்தின் ஊடாக பயணிக்க முடிந்த போதிலும் இந்த பகுதிகளில் உள்ள பஸ் தரிப்பு நிலையங்களில் பஸ்களை நிறுத்துதல் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்குதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பிரதேசங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றுவதற்காகவோ அல்லது இறக்குவதற்காகவோ ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Thu, 10/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை