தாக்குதலுக்கு 06 மாதத்துக்கு முன் சஹ்ரானை கைது செய்திருக்கலாம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஆறு மாதத்திற்கு முன்னர் சஹ்ரானை கைது செய்ய வாய்ப்பிருந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணாந்து தெரிவித்தார். அதனைவிடுத்து தாக்குதல் நடத்தும் நாளில் சஹ்ரானை பிடிக்கும் வாய்ப்பு குறைவு எனவும் முதலாவது புலனாய்வு தகவல் கிடைத்த 09 ஆம் திகதி இது பற்றி முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் நிலந்த பேசியிருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியமளித்த அவர் மேலும் கூறியதாவது,

முழுக்கட்டமைப்பிலும் உள்ள குறைபாட்டினாலே இந்த தாக்குதல் நடந்தது. நான் பதவி வகித்த ஐந்தரை வருடத்தில் சஹ்ரான் ஆயுதம் ஏந்தவில்லை. தாக்குதல் தொடர்பில் சரியான தகவல் எனக்கு கிடைக்கவில்லை. சஹ்ரான் பயங்கரவாதி என்பதை தாக்குதலின் பின்னர் தான் புலனாய்வு பிரிவு தெரிந்து கொண்டது. அவரை அடிப்படைவாத போதகராக தான் அனைவரும் அறிந்திருந்தார்கள். வெளிநாட்டு புலனாய்வு தகவல்குறித்து ஜனாதிபதியை அறிவூட்டினாலும் குறைந்த காலத்தினுள் அது தொடர்பில் செயற்பட முடியாது. தற்கொலை அங்கியை அணிந்த பயங்கரவாதி இடைவழியில் கூட அதனை வெடிக்க வைக்கலாம். அவ்வாறு நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடம் தொடர்ச்சியாக சாட்சியம் பதியப்படுகிறது. (பா)

 

Sat, 10/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை