தரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை

அரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள்ளிகளை தளர்த்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இவ்வார அமைச்சரவை முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இது தொடர்பில் தெரிவித்தார்.

குறித்த நேர்முகப் பரீட்சையின்போது வீட்டு உறுதி வைத்திருக்கின்றமைக்காக 20 புள்ளிகள் வழங்கப்படும் போதிலும், தங்களது பதிவு செய்யப்பட்ட வீட்டு முகவரியை சரிபார்ப்பதற்காக தற்போது பல பெற்றோர்களினால் வீட்டு உறுதியை வழங்க முடியாதிருப்பதாக, அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கு தவறியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

30 அல்லது 40 வருடங்களுக்கு மேலாக குறிப்பிட்ட சில பாடசாலைகளுக்கு அருகில் மக்கள் வசித்து வந்தாலும், அவர்களினால் தங்களது வீட்டு உறுதிகளை காண்பிக்க முடியாது போனமையால், பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க முடியாமல் போயுள்ளனர்.

இந்த முறையை ஒழிக்கவும், புதிய முறையை அறிமுகப்படுத்தி சுற்றுநிரூபத்தை வெளியிடவும் கல்வி அமைச்சர் விரும்புவதாகவும், அவர் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் 5 வருடங்களுக்கும் மேலாக ஒரே முகவரியின் கீழ் பெயர் பதிவு செய்யப்பட்டவர்கள், அவர்கள் தாம் பதிவு செய்யப்பட்ட முகவரியை கிராம அலுவலகர் அல்லது உரிய அதிகாரி ஊடாக ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடிந்தால், அது தொடர்பில் பரிசீலிக்க அமைச்சரவை அமைச்சர்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். (சு)

Thu, 10/01/2020 - 15:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை