MCC உடன்படிக்கை உள்ளடக்கத்தை ஆராய்வதற்கு நிபுணர் குழு நியமனம்

பாராளுமன்றில் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு

சர்வதேச உடன்படிக்கைகளை மீளாய்வு செய்யும்போது சில முறையான நடைமுறைகள் பின்பற்றப்படும். அதற்கிணங்க MCC உடன்படிக்கையின் உள்ளடக்கத்தை ஆராய்வதற்கு அரசாங்கம் நிபுணர்கள் குழுவொன்றை நியமித்துள்ளதென இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று(10) MCC உடன்படிக்கை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் MCC உடன்படிக்கை தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது. மேற்படி குழுவின் முதலாவது அறிக்கை கடந்த ஜூன் 23ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதில் நாட்டிற்கு பொருத்தமில்லாத விடயங்கள் உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பிரதி எதிர்க்கட்சித் தலைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதென தெரிவித்தார். அது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,

MCC உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டபோது வாய் திறக்காமல் ஊமையாக இருந்த சஜித் பிரேமதாச, இப்போது நல்ல பெயர் வாங்குவதற்காக பாராளுமன்றத்தில் அது பற்றி பகிரங்கமாக பேசுகிறாரென தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுவது தவறு. MCC உடன்படிக்கை அமைச்சரவைக்கு வரும்போது நான் அதை எதிர்த்தேன்.

அது கூட தெரியாமல் அப்போது அமைச்சரவையில் இல்லாத ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தவறான கருத்தை தெரிவிக்கின்றார் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை