தீப்பிடித்த நியூ டயமண்ட் கப்பல் கெப்டனிடம் CID வாக்குமூலம்

காலியில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைப்பு

கிழக்கில் பாரிய தீ அனர்த்தத்திற்குள்ளான நியூ டயமன் எரிபொருள் கப்பலின் கெப்டனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அவரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நியூ டயமன் கப்பல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .  கப்பலின் கெப்டன் உள்ளிட்ட பணியாளர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்ததுடன் நியூ டயமன் கப்பல் தொடர்பில் எதிர்கால தீர்மானங்கள் சம்பந்தமாக ஆராயும் முக்கிய கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளதாக கடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்திய சகல தரப்பினருடனும் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாக அந்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தர்னீ பிரதீப் தெரிவித்துள்ளார்.

கப்பலுக்கு பாரிய சேதம் ஏற்படவில்லை என்பதால் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் கொண்டு வருவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் கப்பலின் தற்போதைய நிலமை தொடர்பில் உறுதிப்படுத்திய பின்னர் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை; தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு செலவாகிய நிதி தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் தற்போது கிழக்குக் கரையோரமாக சங்கமன்கண்டிக்கு 45 கடல் மைல் தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. (ஸ)

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 09/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை