விரைவில் ஐபிஎல் போட்டி அட்டவணை

அபு தாபி அரசு பச்சைக்கொடி காட்டிய போதிலும், ஐபிஎல் போட்டி அட்டவணையை வெளியிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிசிசிஐ காத்திருக்கிறது.

ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெற இருக்கின்றன. தற்போது 8 அணி வீரர்களும் மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா காலம் என்பதால் தனிமைப்படுத்தல், கொரோனா பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஷார்ஜாவில் இருந்து துபாய்க்கும், துபாயில் இருந்து அபுதாபிக்கும், அபுதாபியில் இருந்து ஷார்ஜாவுக்கும் வீரர்கள் செல்ல வேண்டியிருக்கும்.

அப்போது தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை போன்ற சிக்கல் ஏற்பட வாய்புள்ளது. ஏனென்றால் மூன்று இடங்களிலும் கொரோனா வழிகாட்டுதல் முறை வெவ்வேறானவை. அபு தாபியில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நடைமுறை அமுலில் உள்ளது. இதனால் போட்டி அட்டவணையை தயாரிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அனுமதியும் பெற்றுள்ளோம் என்று ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரி கூறுகையில் ‘‘அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம். எந்தவித தனிமைப்படுத்துதல் இல்லாமல் அணி வீரர்கள் மூன்று இடத்திற்கும் சென்ற வர அதிகாரிகளால் நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் நெறிமுறைப்படி வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பார்கள். வெளியில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படலாம். ஆனால், அவர்கள் ஏற்கனவே அவர்களுடைய ஓட்டல்களில் இருந்தால் போட்டிக்கு சென்று வர எந்த பிரச்சினையும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளது.

இதனால் போட்டியை நடத்துவதற்கான தடை நீங்கியுள்ளது. ஆகவே ஐபிஎல் போட்டி அட்டவணை தயாரிப்பில் பிசிசிஐ கவனம் செலுத்தியுள்ளது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்களே உள்ளதால் ஒவ்வொரு அணிகளும் அட்டவணையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஐபிஎல் விதிப்படி நடப்பு சம்பியன் அணியும், 2-வது இடம் பெற்ற அணியும் முதல் ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதன்படி மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோத வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் 2 பேர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அணியின் அனைத்து நபர்களும் மேலும் ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பரிசோதனையில் 13 பேரைத் தவிர மற்ற அனைவருக்கும் நெகட்டிவ் வந்துள்ளது. இன்னும் ஒரு பரிசோதனை நடத்த வேண்டியுள்ளது. அந்த பரிசோனையிலும் நெகட்டிவ் வந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 4ம் திகதி அல்லது 5-ம் திகதி பயிற்சியை தொடங்கும்.

போட்டி அட்டவணையை பிசிசிஐ விரைவில் வெளியிட விரும்புகிறதாம். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் விளையாடுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு வாரம் கழித்து போட்டியை தொடங்கும் வகையில் அட்டவணையை தயாரிக்கும் யோசனை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக காத்திருக்கவில்லை என்றால் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அல்லது இந்த வாரத்திற்குள் போட்டி அட்டவணையை வெளியிட்டு விடும்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஸ்டாஃப்கள் என்பதால் முதல் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ். விஸ்வநாதன் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாங்கள் விளையாட தயாராக இருக்கிறோம். ஆனால் பிசிசிஐ-தான் முடிவு எடுக்க வேண்டும். எங்கள் அணியில் கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளத்தை கையாளும் நபர்கள்தான். கேட்டுக்கொண்டால் முதல் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறோம்.

இந்த வாரத்திற்குள் போட்டி அட்டவணை தயாராகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

Thu, 09/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை