இலங்கை ரக்பி சம்மேளனத்தின் தலைவராக ரிஸ்லி இல்யாஸ் தெரிவு

இலங்கை ரக்பி விளையாட்டில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், ரக்பி சம்மேளனத்தின் புதிய தலைவராக ரிஸ்லி இல்யாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ரக்பி சம்மேளனத்தின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் கடந்த சனிக்கிழமை கொழும்பு ரமாடா ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் நாடாளாவிய ரீதியில் இருந்து சுமார் 300பேரைக் கொண்ட மாவட்ட, மாகாண, முப்படை, பாடசாலை மற்றும் ரக்பி கழகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் இன்னாள், முன்னாள் வீரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ரக்பி சம்மேளனத்தின் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றதுடன், இதில் இலங்கை ரக்பி சம்மேளனத்தின் புதிய தலைவராக ரிஸ்லி இல்யாஸ் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் இலங்கை ரக்பி சம்மேளனத்தின் செயலாளராக ஜுட் திமித்ரி தேர்வாக, நசீம் மொஹமட் பிரதித் தலைவராகவும், ரியல் அத்மிரால் ஏ.யூ.டி ஹெட்டியாரச்சி உப தலைவராகவும், புதிய பொருளாளராக தினேஷ் பெரேராவும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், இலங்கை ரக்பி சம்மேளனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக பைஸால் மொஹமட், ரொஷான் டீன், ஜீவன் குணதிலக்க, ஷம்ரன் பெர்னாண்டோ, பவித்ர பெர்னாண்டோ, நிரஞ்சன் அபேவர்தன மற்றும் பந்துல மல்லிகாரச்சி ஆகியோர் தேர்வாகினர்.இந்த நிலையில், வெள்ளவத்தை பீட்டர்சன் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் 8ஆம் இலக்க வீரராக விளையாடி இலங்கை ரக்பி சம்மேளனத்தின் புதிய தலைவராக தேர்வாகிய ரிஸ்லி இல்யாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

”தேசிய ரீதியில் ரக்பி விளையாட்டை அபிவிருத்தி செய்யவும், ஆசியாவில் முன்னணி ரக்பி அணியாக இலங்கையை மாற்றுவதற்கும் தேவையான திறமைகளைக் கொண்ட வீரர்களை இனங்காண்பதற்கான வேலைத் திட்டங்களை நாங்கள் முதலில் ஆரம்பிக்கவுள்ளோம்.

இவ்வருடம் ஆரம்பம் முதல் ஏற்பட்டுள்ள கொவிட் – 19வைரஸ் காரணமாக ஏனைய விளையாட்டைப் போன்று ரக்பி விளையாட்டும் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே மீண்டும் அனுசரணையாளர்களின் உதவியுடன் ரக்பி விளையாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் மிக விரைவில் பொருத்தமான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

இதன்படி, கொவிட் – 19வைரஸ் காரணமாக தடைப்பட்டுள்ள ரக்பி விளையாட்டை மிக விரைவில் ஆரம்பிப்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம். குறிப்பாக, சுகாதார அமைச்சின் வழிகாட்டலுடன் ரக்பி விளையாட்டை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அத்துடன், எதிர்வரும் 5வருடங்களுக்கான குறுகிய மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதற்கு அமைச்சர் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார் என நம்புகிறோம்.

எதிர்காலத்தில ரக்பி விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சின் ஒத்துழைப்பினை நாங்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளோம்.

நான் ரக்பி சம்மேளனத்தின் செயலாளராக கடமையாற்றிய காலத்தைப் போல, மேல் மாகாண ரக்பி சங்கத்தின் தலைவராகச் செயற்பட்ட காலத்திலும் எமது விளையாட்டுத்துறை அமைச்சர் ரக்பி விளையாடி வந்தார். அவருடைய திறமை, அனுபவம் போன்றவற்றை ரக்பி விளையாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

இதேநேரம், வடக்கு, கிழக்கில் ரக்பி விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன். அந்தப் பகுதியில் நிறைய திறமையான வீர, வீராங்கனைகள் உள்ளார்கள். முதலில் அவர்களை இனங்காண்பதற்கான செயற்பாடுகளை மாகாண மற்றும் மாவட்ட ரீதியாக முன்னெடுக்கவுள்ளோம்.

இதுவரை காலமும் ரக்பி விளையாட்டின் முன்னேற்றத்துக்காக இலங்கை ரக்பி சம்மேளனத்துடன் இணைந்து செயற்பட்ட டயலொக் ஆசியாட்டா நிறுவனத்துக்கும், எஸ்.ஏ.ஜீ.டி நிறுவனத்துக்கும் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இனிவரும் காலங்களிலும் அந்த நிறுவனங்கள் எமக்கு அனுசரணை வழங்குவதற்கு முன்வருவார்கள் என நம்புகிறோம்” என அவர் தெரிவித்தார்.

Wed, 09/02/2020 - 09:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை