பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக அன்வர் இப்ராஹிம் அறிவிப்பு

புதிய அரசு ஒன்றை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருப்பதாக மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் நேற்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஆளும் கூட்டணி அரசு அதிகாரப் போட்டி காரணமாக ஏழு மாதங்களுக்கு முன் கவிழ்க்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய பிரதமர் முஹ்யத்தீன் யாசினின் தலைமை குறித்து அதிருப்தி அடைந்துள்ள பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் பலரும் தம்மை அணுகி இருப்பதாக அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தனது மனைவியுடன் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு காரணமாக முஹ்யத்தீன் நிர்வாகம் வீழ்ச்சி அடையும் என்றும் மக்கள் விருப்புடன் தமது அரசு ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.

எனினும் தமக்கு ஆதரவளிப்பவர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்த அவர், மன்னருடனான சந்திப்புக்குப் பின்னர் அதனை வெளியிடுவதாகவும் தெரிவித்தார். மன்னர் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மாமன்னரைச் சந்திக்க இயலும் என தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

“கடவுளுக்கு நன்றி. தற்போது எனக்கு உறுதியான, போதுமான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதுகுறித்து மாமன்னரிடம் தெரிவிப்பேன்” என்றார் அன்வர்.

அவரது இந்த அறிவிப்பை அடுத்து மலேசிய பங்குச்சந்தைப் புள்ளிகள் 2 வீதம் அளவுக்குக் குறைந்தன.

அன்வரின் அறிவிப்பில் நம்பிக்கை ஏற்படும் பட்சத்தில் மாமன்னர் அவரை சந்திக்கக்கூடும். எனவே மாமன்னரின் முடிவுக்காக மலேசிய மக்கள் காத்திருக்கின்றனர்.

2018 ஆம் ஆண்டு அதிகாரத்தை இழந்த கட்சிகளுடன் ஆளும் பகத்தான் ஹரப்பான் கூட்டணியில் அதிருப்தி அடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்தே ஒரு வார அரசியல் இழுபறிக்கு பின் கடந்த மார்ச் மாதம் புதிய அரசு ஒன்று உருவாக்கப்பட்டது. அன்வர் தலைமையிலான பகத்தான் ஹரப்பான் கூட்டணி கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அப்போதைய பிரதமர் நஜீப் தலைமையிலான அரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. பகத்தான் ஹரப்பான் கூட்டணி சார்பில் மகாதீர் மொஹம்மத் பிரதமரானார். அச்சமயம் சிறையில் இருந்த அன்வர் இப்ராஹிம் பின்னர் விடுதலையானார்.

மகாதீர் மொஹம்மதிற்கு பின்னர் மலேசியாவின் அடுத்த பிரதமராக அன்வர் இப்ராஹிம் பொறுப்பேற்பார் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. மகாதீர் திடீரென்று பதவி விலகியதை அடுத்துத் முஹ்யத்தீன் யாசின் பிரதமர் பதவியைக் கைப்பற்றினார்.

Thu, 09/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை