மேற்கு அமெரிக்காவில் பயங்கரக் காட்டுத் தீ

மேற்கு அமெரிக்காவின் பெரும் பகுதிகளில் முன்னர் இல்லாத அளவில் பயங்கர காட்டுத் தீ தீவிரமாக பரவியுள்ளது. ஒரேகன் மாநிலத்தில் குறைந்தது ஐந்து சிறு நகரங்கள் தீயினால் அழிந்திருக்கும் நிலையில் உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன.

மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் ஒரேகன் மற்றும் அண்டைய மாநிலமான வொசிங்டனில் பேரழிவை ஏற்படுத்தும் தீச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குளிர் மற்றும் ஈரமான காலநிலை நிலவும் இந்தப் பகுதிகளில் தீவிரமாக தீ பரவுவது அரிதான ஒன்றாகவே உள்ளது.

ஒரேகனில் காட்டுத் தீயால் மூவர் உயிரிழந்திருப்பதோடு வொசிங்டனில் தீயிலிருந்து தப்ப முயன்றபோது ஒரு வயது குழந்தை கொல்லப்பட்டு பெற்றோர்கள் தீக்காயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கலிபோர்னியாவிலும் மூவர் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேற்கு அமெரிக்காவில் சுமார் 100 தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் கலிபோர்னியாவில் சுமார் 2.2 மில்லியன் ஏக்கர் நிலம் தீயால் சேதமடைந்துள்ளது.

வானில் கரும்புகை சுழ்ந்திருப்பதன் காரணமாக பல நகரங்களிலும் வானம் செம்மஞ்சல் நிறத்தில் காணப்பட்டது. பயங்கரத் தோற்றத்துடன் காட்சியளித்த வானத்தைப் பலரும் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர். சில இடங்களில் பனித்துளிகள் போல் சாம்பல் வானத்திலிருந்து தரையில் விழுந்தன.

இந்தக் காட்டுத் தீ மேலும் மூன்று மேற்கு மாநிலங்களில் பரவி இருப்பதாக தேசிய தீயணைப்பு தகவல் மையம் தெரிவித்துள்ளது.

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை