போதைப்பொருள் பாவனையிலிருந்து தமிழ் சமூகத்தை பாதுகாப்பது அவசியம்

போதைப் பொருள் பாவனையிலிருந்து சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பை இளைஞர்கள் கையிலெடுக்க வேண்டுமென, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரி.கலையரசன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிராந்தியத்தில் பணியாற்றிய உலக தரிசனம் நிறுவனத்தின் அபிவிருத்தி வேலைத்திட்ட நிறைவு விழா நேற்று (10) நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், நாவிதன்வெளி பிரதேசம் ஒரு காலத்தில் மக்கள் நடமாட்டம்கூட இல்லாத பிரதேசமாக காணப்பட்டது. இரண்டாயிரமாம் ஆண்டுகளுக்கு பின்னர்தான் இங்கு ஒரு பிரதேச செயலகத்தையும், பிரதேச சபையையும் கொண்டுவர முடிந்தது.

இந்தக் காலகட்டத்தில் தான் World Vision நிறுவனத்தின் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. இங்குள்ள மக்களின் அத்தியவசியத் தேவையாகக் காணப்பட்ட குடிநீர் திட்டத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இந்த நிறுவனம் பெரிதும் உதவியது.

சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு என, சுமார் 850 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி உள்ளனர். நாவிதன்வெளி பிரதேசத்தில் இந்த அமைப்பின் பங்களிப்பு அபரிதமாக உள்ளது.

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது போல இன்னும் நாம் முன்னேற வேண்டும். குறிப்பாக கல்வித்துறையை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு நாவிதன் வெளி கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் அயராது பாடுபடல் அவசியம்.

இன்று பெரியவர்களை விட சிறியவர்கள் அதிகளவில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி சமூகத்தை சீரழிக்கும் நிலை உருவாகிவிட்டது. இதனை இல்லாமல் செய்ய வேண்டும்.

இந்தப் பொறுப்பை இளைஞர்கள் மற்றும் சமூகத்தலைவர்கள் கையிலெடுப்பது அவசியம்.

இல்லையென்றால் தமிழ்ச் சமூகம் அழிந்து விடும் அபாயம் தூரத்தில் இல்லை என்றார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், நிறுவனத்தின் தேசியப் பணிப்பாளர் கலாநிதி தனன் சேனாதிராஜா, பிரதேச செயலாளர் எஸ் ரங்கநாதன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர். ஜி.சுகுணன். கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ் புவனேந்திரன், உதவிப் பிரதேச செயலாளர் என் நவனீதராஜா, கணக்காளர் யு.எல்.ஜவாஹிர், நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் சிரோன் பெரேரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

பெரியநீலாவணை விசேட நிருபர்

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை