இஸ்ரேலுடன் பஹ்ரைன், ஐ.அ.இராச்சியம்; வெள்ளை மாளிகையில் அமைதி ஒப்பந்தம்

பலஸ்தீனமெங்கும் ஆர்ப்பாட்டம்; ரொக்கெட் வீச்சு

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் உடன்படிக்கையை கண்டித்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதன்போது இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் பதிலுக்கு காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் பங்கேற்றனர்.  

இதனை ஒட்டி கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்புப் பெறும் வகையில் முகக்கவசம் அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பலஸ்தீன கொடியை ஏந்தியபடி மேற்குக் கரை நகரங்களான நப்லுஸ் மற்றும் ஹெப்ரோன், அதேபோன்று காசா பகுதியில் பேரணி நடத்தினர். பலஸ்தீன அதிகார சபையின் தலைமையகம் இருக்கும் ரமல்லாவிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதில் “துரோகிகள்”, “ஆக்கிரமிப்பாளர்களுடன் எந்த உறவும் இல்லை” மற்றும் “இந்த உடன்படிக்கைகள் வெட்ககரமானது” என்ற பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.  

காசாவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எமாத் இஸ்ஸா கூறும்போது, இந்த கரையோரப் பகுதி வழியே நடந்தால், “இஸ்ரேலிய முற்றுகையை எதிர்த்து வெறுமனே ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கால்களை இழந்த காசா இளைஞர்களையும் வாழ்க்கை முடங்கிக் கிடப்பதையும் பார்க்கலாம்” என்றார்.  

“மேற்குக் கரை மற்றும் ஜெரூசலத்தில் இஸ்ரேலிய புல்டோசர்கள் தொடர்ந்து பலஸ்தீன வீடுகளை தரைமட்டமாக்கி நாளாந்தம் தமது நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பலஸ்தீனர்கள் இனச்சுத்திகரிப்புக்கு ஆளாகின்றனர்” என்றும் இஸ்ஸா, அல் ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபா மற்றும் அபூதாபி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் செயித் அல் நஹ்யான் ஆகியோரின் படங்களை எரித்தனர்.   

மறுபுறம் கடந்த கால் நூற்றாண்டில் முதல் முறையாக அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை ஏற்படுத்தும் நிகழ்வு ஒன்று வெள்ளை மாளிகையில் இடம்பெற்றது.  

எனினும் ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்து இஸ்ரேல் வெளியேறினால் மாத்திரமே மத்திய கிழக்கில் அமைதி ஏற்படும் என்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.  

“இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடியும் வரை பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைய முடியாது” என்று அப்பாஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.  

பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய உடன்படிக்கைகள் பிராந்தியத்தில் இஸ்ரேலுடன் அமைதியை கொண்டுவராது என்று ஹமாஸ் பேச்சாளர் சமி அபூ சுஹ்ரி தெரிவித்தார். “பிராந்தியத்தில் இருக்கும் மக்கள் தமது உண்மையான எதிரியான இந்த ஆக்கிரமிப்பாளர்களை தொடர்ந்து எதிர்க்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.  

இந்த உடன்படிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு பலஸ்தீனர்களின் மக்கள் எதிர்ப்பின் ஒருங்கிணைந்த கட்டளையகம் அழைப்பு விடுத்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டு கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில் ‘கறுப்புத் தின’ பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். இதனிடையே வெள்ளை மாளிகையில் உடன்பாடு எட்டப்படும் அதே நேரத்தில் காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி இரு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. காசாவின் வடக்காக இருக்கும் அஷ்கலோன் மற்றும் அஷ்டோட் நகரங்களில் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இதனால் மூன்று இஸ்ரேலியர்கள் சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காசா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசின. ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.  

இந்நிலையில் நேற்றுக் காலையில் இஸ்ரேலை நோக்கி 13ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இதேவேளை இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் உடன்படிக்கையை எதிர்த்து பஹ்ரைனில் சிறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.  

பஹ்ரைன் எதிர்க்கட்சியான அல் வெபக் தேசிய இஸ்லாமிய கழகம் ட்விட்டரில், “தற்போது துரோகம் இழைக்கப்படுவதோடு பலஸ்தீன் மற்றும் அல் குத்ஸிற்கு (ஜெரூசலம்) எதிராக அவர்கள் சதியில் இடுபடும்போது, இறைவன் பெரியவன் என்று நாம் கோசம் எழுப்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Thu, 09/17/2020 - 08:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை