சுமுகமான ஆட்சி மாற்றத்திற்கு குடியரசு கட்சித் தலைவர் உறுதி

அமெரிக்காவில் ஜனாதிபதி தோர்தலுக்குப் பின்னரான ஆட்சி மாற்றம் சுமுகமாக இடம்பெறும் என்று குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ச் மக்கோனல் உறுதி அளித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த நடைமுறை பற்றி சந்தேகம் எழுப்பி இருக்கும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறப்போகும் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஜனவரி 20 ஆம் திகதி ஒரு சுமுகமான பதவிப்பிரமாணம் இடம்பெறும் என்று மூத்த செனட் உறுப்பினரான மக்கோனல் தெரிவித்தார்.

முன்னதாக சுமுகமான ஆட்சி மாற்றம் பற்றி செய்தியாளர்களிடம் விளக்கமளிக்க மறுத்த டிரம்ப், “என்ன நடக்கும் என்று பார்ப்போம்” என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான மாநிலங்கள் தபால் வாக்கெடுப்பை ஊக்குவித்திருக்கு நிலையில் டிரம்ப் அது பற்றி சந்தேகம் எழுப்பி வருகிறார். எனினும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் தபால் வாக்கெடுப்பு பாதுகாப்பானது என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

குடியரசு கட்சியின் டிரம்பை விடவும் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் தேசிய அளவிலான கருத்துக் கணிப்புகளில் முன்னிலை பெற்றுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் வழக்கத்தை விடவும் அதிகமானவர்கள் தமது வாக்குகளை தபால்மூலம் அளிக்கவுள்ளனர். இந்த தபால் வாக்கின் பாதுகாப்பு பற்றி டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் தோல்வி அடைந்த அனைத்து ஜனாதிபதிகளும் தமது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர். டிரம்ப் அதனை செய்ய மறுத்தால் அமெரிக்கா முன்னர் சந்திக்காத சூழல் ஒன்றுக்கு முகம்கொடுக்கும்.

இவ்வாறு நடந்தால் இராணுத்தைக் கொண்டு டிரம்பை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றும்படி பைடன் பரிந்துரைத்துள்ளார்.

இந்நிலையில் மக்கோனல் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நவம்பர் 3 தேர்தலில் வெற்றி பெறுபவர் ஜனவரி 20இல் பதவி ஏற்பார். 1792 தொடக்கம் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளிலும் போன்று சுமுகமான ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏனைய குடியரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இதேபோன்ற வாக்குறுதியை வழங்கியுள்ளனர்.

Sat, 09/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை