மழை தொடரும்; கடலில் கடும் காற்று; நிலச்சரிவு எச்சரிக்கை!

மழை தொடரும்; கடலில் கடும் காற்று; நிலச்சரிவு எச்சரிக்கை!-Weather Forecast-Rain-Landslide Warning

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் தற்போது பெய்து வரும் மழை காரணமாக, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை கடற்பரப்பு மற்றும் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக அமையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் இடைக்கிடை 50 - 55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும், கடல் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கடல் தொழிலில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (02ஆம் திகதி) மதுரங்குளி, தல்கஸ்வெவ, ஹுனுகல்லேவ, மன்னம்பிட்டி மற்றும் கல்குடா ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Wed, 09/02/2020 - 11:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை