யாழ். செல்லும் அமைச்சர்களின் கவனம் வன்னிக்கும் அவசியம்

அதிகம் பாதிப்புற்ற மக்கள் அங்கிருப்பதாக செல்வம் M.P சுட்டிக்காட்டு

வனவள திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபை என்பன வன்னி மக்களுக்கு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக கவனம் செலுத்தாவிட்டால் அந்த மக்களின் வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை என்பன மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

அமைச்சர்கள் வன்னி மாவட்டத்தின் ஊடாகவே யாழ்ப்பாணத்துக்கு செல்கின்றனர். அவ்வாறாக செல்லும் போது, வன்னி மாவட்டத்துக்கும் வந்து தமது கவனத்தை செலுத்த வேண்டுமென்று கோருகிறேன்.

வன்னி மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த நிலைமை உள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்த மாவட்டத்தில் மலசல கூடம் தொடர்பான பிரச்சினை பாரிய பிரச்சினையாக உள்ளது. மலசல கூடங்களே இல்லாத கிராமங்களும் இங்குள்ளன. அங்கு பெண்கள் தமது இயற்கை கடனை கழிப்பதற்காக காடுகளுக்குள் செல்ல வேண்டும்.

சில இடங்களில் தண்ணீர் இல்லாத நிலைமையும் காணப்படுகிறது. அமைச்சர்களுக்கு வன்னி மாவட்டத்திற்கும் வந்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவிட வேண்டும்.

இதேவேளை எமது மக்கள் போருக்கு பின்னர் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளனர். மீள்குடியேற்றம் ,விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் உள்ளாகின்றனர். குளத்து நீரையும் பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். இது தொடர்பாக கவனம் செலுத்தாவிட்டால் மக்களின் வாழ்க்கையில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அபிவிருத்திக் குழு கூட்டங்களில் நாங்கள் இது தொடர்பாக கூறியுள்ளோம்.

அபிவிருத்திக் குழு கூட்டங்களில் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளும் கலந்துகொள்ள வேண்டும்.

நானும், சக பாராளுமன்ற உறுப்பினர் வினோவும் கோயில் ஒன்றுக்கு சென்று திரும்பிய பின்னர் அந்த கோயிலுக்கு செல்வதற்கு பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏன் என்று தெரியவில்லை. 26 ஆம் திகதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுக்கு மக்கள் வருவதை தடுக்க கூடாது. இந்த விடயத்தில் பொலிஸார் தலையிடக் கூடாது. வழிபாட்டுக்கு செல்வதற்கு பொலிஸாரினால் தடையுத்தரவு பிறப்பிக்க முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

 

 

 

Thu, 09/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை