அமெரிக்காவில் சூறாவளியால் கடும் மழை, பாரிய வெள்ளம்

வெப்பமண்டல சாலி சூறாவளி தாக்கியதில் அமெரிக்காவில் அரை மில்லியன் மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதோடு அமெரிக்காவின் வளைகுடா கரை பகுதி கடும் மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது.

2ஆம் நிலை சூறாவளியாக பலவீனமடைந்து கடந்த புதன்கிழமை கரையைத் தொட்ட சாலி தொடர்ந்து பிளோரிடா மற்றும் அலபாமா பகுதிகளில் வீசிவருகிறது.

மணிக்கு 169 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்று காரணமாக 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 46 செ.மீ அளவுக்குக் கனமழை கொட்டியுள்ளது. இதனால், வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடலில் நின்றுகொண்டிருந்த படகுகள் பல வீதிகளுக்கு தூக்கி வீசப்பட்டுள்ளன.

இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதோடு நூற்றுக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். புளோரிடாவின் பென்சகோலா பகுதியில் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

“புளொரிடா பான்ஹன்ட் மற்றும் தெற்கு அலபாமாவின் பல பகுதிகளில் பேரழிவு மற்றும் உயிராபத்துக் கொண்ட வெள்ளம் தொடர்ந்து நீடித்து வருகிறது” என்று தேசிய சூறாவளி மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சூறாவளி பென்சகோலா நகரில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்தில் பெய்து தீர்த்துள்ளது என்று அந்த நகர தீயணைப்புப் படைத் தலைவர் கின்னி கார்னோர் தெரிவித்துள்ளார்.

அட்லான்டிக் கடல் பகுதியில் உருவெடுத்த பல சூறாவளிகளில் ஒன்றாக இந்த சாலி சூறாவளி உள்ளது.

Fri, 09/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை