ஆப்கான் வான் தாக்குதலில் பொதுமக்கள் பலரும் பலி

ஆப்கானிஸ்தானின் வட கிழக்கில் உள்ள தலிபான்களின் முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.  

ஆப்கான் அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையே ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைதி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே கடந்த சனிக்கிழமை குன்துஸ் பகுதியில் ஆப்கான் விமானப் படை இந்த இரட்டை தாக்குதலை நடத்தியுள்ளது. 

இதில் குறைந்தது 12பொதுமக்கள் கொல்லப்பட்டு மேலும் 10க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக மாகாண அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  

இதன்போது 40க்கும் அதிகமான தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்போது பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பில் விபரம் வெளியிடாதபோதும் அது பற்றி விசாரணை நடத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  

தமது போராளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி தலிபான்கள் எந்த தகவலும் அளிக்கவில்லை.  

குந்துஸ் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரான பாத்திமா அஸிஸ் கூறியதாவது, “முதல் தாக்குதல் தலிபான் முகாம் மீது இடம்பெற்றபோதும் குண்டு வெடித்த பகுதியில் பொதுமக்கள் திரண்ட நிலையில் இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்றார்.  

இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆப்கான் இராணுவத்திற்கு தலிபான் இலக்கு ஒன்று தவறி கால்நடை சந்தை ஒன்றின் மீது மோட்டார் குண்டு வீசியதில் குறைந்தது 23 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.    

Mon, 09/21/2020 - 13:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை