உலகில் கொரோனா தொற்று ஒரே நாளில் சாதனை உச்சம்

கடந்த 24 மணி நேரத்தில் உலகெங்கும் இதுவரை இல்லாத அளவுக்கு 307,930 புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் சாதனை அளவுக்கு அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் 5,500 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 917,417 ஆக அதிகரித்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

இதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளிலேயே நோய்த் தொற்றில் மிகப் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி உலகில் 28 மில்லியனுக்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு அதில் பாதிக்கும் அதிகமானவை அமெரிக்காஸ் பிராந்தியத்திலேயே உள்ளது.

இதற்கு முன்னர் கடந்த செப்டெம்பர் 6 ஆம் திகதி 306,857 கொவிட்–19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதே ஒருநாளில் அதிகமாக இருந்தது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் 94,372 புதிய நோய்த் தொற்று சம்பவங்களும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் 45,523 மற்றும் பிரேசிலில் 43,718 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றினால் கடந்த 24 மணி நேரத்திற்குள் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதோடு பிரேசிலில் 874 பேர் பலியாகியுள்ளனர். இந்தியா உலகில் அதிக தொற்றாளர்கள் உள்ள நாடாக அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் இந்தியாவில் இரண்டு மில்லியன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இது இந்த தொற்று ஆரம்பித்தது தொடக்கம் ஒரு மாதத்தில் உலகில் பதிவான அதிக எண்ணிக்கையாக உள்ளது.

Tue, 09/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை