ரஷ்ய - இலங்கை தூதரக கிண்ணம் குர்ஸ்க் பிளாஸ்டர்ஸ் வசமானது

இலங்கையின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வந்து ஊக்குவிக்கும் நோக்கில் ரஷ்யாவுக்கான இலங்கைத்தூதரகம் இலங்கையர் அங்கம் வகிக்கும் ரஷ்யாவின் மாநில அணிகளுக்கிடையில் வருடாந்தம் இலங்கை தூதர கிண்ண கிரிக்கெட் தொடரை நடாத்தி வருகின்றது.

2008 ஆம் ஆண்டு முதல் முதன் மாஸ்கோவில் இடம்பெற்ற இலங்கைத்தூதர கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர் இந்தாண்டு குர்ஸ்க் நகரில் நடைபெற்றது.

இத்தொடரில், ரஷ்ய மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாஸ்கோ லயன்ஸ், மாஸ்கோ ஸ்பார்டன்ஸ்,

வோல்கா ரேஞ்சர்ஸ் (ட்வெர்), குர்ஸ்க் பிளாஸ்டர்ஸ், குர்ஸ்க் மஹாசன், நெவா ரைடர்ஸ் (செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்) ஆகிய ஆறு அணிகள் பங்கு பற்றின.

போட்டிகளும் பரிசளிப்பும் 350 இலங்கையர் மருத்துவ மாணவர்கள் கல்வி கற்று வரும் குர்ஸ்க் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

போட்டித்தொடரில் சம்பியனாகத் தெரிவான குர்ஸ்க் பிளாஸ்டர்ஸ் அணி 300 அமெரிக்க டாலர் பணப்பரிசினைப் பெற்றுக்கொண்டதுடன், இரண்டாமிடத்தினை மாஸ்கோ லயன்ஸ் அணி பெற்றுக்கொண்டது. இப்போட்டித்தொடரில் தொடர் நாயகன் விருதினை குர்ஸ்க் பிளாஸ்டர்ஸ் அணி வீரர் லஹிரு பிரமோத்,

சிறப்பாட்டக்காரருக்கான விருதினை மொஸ்கோ லயன்ஸ் அணி வீரர் ரெவீன் பண்டாரா, சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை குர்ஸ்க் பிளாஸ்டர்ஸ் அணி வீரர் எரங்கா பெர்னாண்டோ ஆகியோர் சிறப்பு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

ரஷ்யாவுக்கான இலங்கைத்தூதுவர் பேராசிரியர் எம்.டி.லமாவன்ச தலைமையில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் குர்ஸ்க் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வி.ஏ.லாசரென்கோ , பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பல்கலைக்கழக நிருவாகம், மாணவர்கள், தூர இடங்களிலிருந்து வருகை தந்து கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், நிகழ்வுகளைச் சிறப்பாக நடாத்தி முடிக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றிய தூதரக பாதுகாப்பு அதிகாரி திரு.உதிதா பியசேனா மற்றும் குர்ஸ்க் பிராந்தியத்துக்கான இலங்கைத்தூதரக கெளரவ கொன்சல் பேராசிரியர் முஹம்மது ஷஹீன் ஆகியோருக்கும் நிகழ்வுக்கு நிதி அனுசரணை வழங்கிய ரஷ்யா வாழ் இலங்கை சமூகத்திற்கும் தூதரக அதிகாரிகளுக்கும் ரஷ்யாவுக்கான இலங்கைத்தூதுவர் பேராசிரியர் எம்.டி.லமாவன்ச நன்றி தெரிவித்தார். இலங்கைத்தூதர கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர் -2021 அடுத்தாண்டு மே மாதம் ட்வெர் நகரில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 09/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை