அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி சம்பியன்

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக அணி அம்பாறை மாவட்ட சம்பியனாக தெரிவாகி கிழக்கு மாகாண மட்டப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இச்சுற்றுப்போட்டி பாலமுனை பொதுவிளையாட்டு மைதானத்தில் (20.09.2020) அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அமீர் அலி தலைமையில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலக அணிகள் கலந்து கொண்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு நிந்தவூர் பிரதேச செயலக அணியும்,அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக அணியும் தெரிவு செய்யப்பட்டனர்.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக அணி பணித்தமைக்கமைவாக நிந்தவூர் பிரதேச செயலக அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 7 விக்கட்களை இழந்து 73 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.இதில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரா் இஸ்மாயில் 24 ஓட்டங்களைப் பெற்றார்.பந்து வீச்சில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணிசார்பாக அஸ்மத் பிரதான 2 விக்கட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு வெற்றி பெறத் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக அணியினர் 9.1 ஓவர் முடிவில் 8 விக்கட்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்று 2 விக்கட்களினால் இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி வெற்றி பெற்று மாவட்ட சம்பியனாகினர்.இதில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரா் றஸ்மி இறுதி வரை களத்தில் நின்று துடுப்படுத்தாடி 29 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு வழியமைத்தார்.நிந்தவூர் அணி சார்பாக பந்து வீச்சில் நிக்சி முக்கிய 4 விக்கட்களை வீழ்த்தினார்.

இதில் முதல் அரை இறுதிப்போட்டி திருக்கோவில் பிரதேச செயலக அணிக்கும் நிந்தவூர் பிரதேச செயலக அணிக்குமிடையில் நடைபெற்றதில் நிந்தவூர் பிரதேச செயலக அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.இரண்டாவது அரை இறுதிப்போட்டி அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகம் மற்றும் அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகம் அணிகளுக்கிடையில் நடைபெற்றதில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

 

(ஒலுவில் கிழக்கு தினகரன்,அட்டாளைச்சேனை விசேட நிருபர்கள்)

Wed, 09/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை