அமெரிக்காவில் கறுப்பினத்தவர் உயிரிழப்புக்கு காரணமான ஏழு பொலிஸாரும்; இடைநிறுத்தம்

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸ் பிடியில் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஏழு பொலிஸார் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்டிருந்த டானியல் ப்ரூட் என்ற அந்த ஆடவர் பொலிஸார் மீது உமிழ்வதை தடுக்க அவருக்கு முகமூடி அணிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் இடைநிறுத்தப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரோசஸ்டர்ஸ் மேனர் லொவ்லி வொர்ரன், திட்டமிட்ட இனவாதமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ப்ரூட் கடந்த மார்ச் மாதமே உயிரிழந்தபோதும் அதுபற்றி தற்போதே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்காவில் பெரும் ஆர்ப்பாட்டங்களை தூண்டிய ஜோர்ஜ் ப்ளொயிட்டின் உயிரிழப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே ப்ரூட் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மற்றொரு கறுப்பினத்தவரான ப்ளொயிட்டின் மரணமும் இதனை ஒத்துள்ளது. இந்த இருவரும் பொலிஸாரால் தடுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதனை அடுத்து பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் நிறவெறிக்கு எதிராக உலகெங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

ஏழு பொலிஸாரின் இடைநிறுத்தமானது ப்ரூட் உயிரிழந்த பின் எடுக்கப்படும் முதல் ஒழுக்காற்று நடவடிக்கையாக உள்ளது. இந்த ஒப்பந்த விதிகளின்படி நிறுத்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என்று நகர அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேயர் வொர்ரன், 'சபையின் ஆலோசனைக்கு எதிராக விசாரணையில் உள்ள அதிகாரிகளை நான் இன்று இடைநிறுத்தம் செய்வதோடு, விசாரணைகளை பூர்த்தி செய்யும்படி சட்டமா அதிபரை நான் வலியுறுத்துகிறேன்' என்றார்.

'டானில் ப்ரூட்டின் முன் எமது பொலிஸ் திணைக்களம், எமது உளச் சுகாதார அமைப்பு, எமது சமூகம், நானும் தோல்வி அடைந்துவிட்டேன்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த மாத ஆரம்பம் வரை இந்த சம்பவம் குறித்து தம்மை அறிவுறுத்த நகர பொலிஸ் தலைவர் லாரொன் சிங்லேட்டரி தவறிவிட்டதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் கோரிக்கைக்கு அமைய பொலிஸார் உடலில் அணிந்திருக்கும் கெமராவின் வீடியோ பதிவு கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

தாம் அந்த வீடியோவைப் பார்த்தபோது பொலிஸ் தலைவர் தமக்கு கூறியதில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதாக கண்டறிந்தேன் என்று வொர்ரன் தெரிவித்தார்.

Sat, 09/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை