பாடசாலை வீர, வீராங்கனைகளை தெரிவு செய்யும் குழுவுக்கு அசந்த டி மெல் தலைமை

ஒப்சேர்வர்- – மொபிடெல் சிறந்த பாடசாலை வீர, வீராங்கனைகளை தெரிவு செய்யும் குழுவுக்கு இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் தலைமைதாங்குகிறார். இன்று 18ஆம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஒப்சேர்வர் மொபிடெல் சிறந்த பாடசாலை வீர வீராங்கனைகள் தெரிவு நடைபெறுகிறது.

இலங்கைக்கான முதல் டெஸ்ட் விக்கட்டை கைப்பற்றிய பெருமை அசந்த டி மெல்லையே சாரும். 1982 இல் இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற இலங்கை அணியின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜெப் குக்கின் விக்கட்டை கைப்பற்றியதன் மூலம் இந்த பெருமை அசந்த டி மெல்லுக்கு கிடைத்தது அசந்த டி மெல் தற்போது இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியை தெரிவு செய்யும் குழுவுக்கு தலைவராக உள்ளார். எனவே இவ்வருட ஒப்சேர்வர் – மொபிடெல் சிறந்த பாடசாலை வீர வீராங்கனைகளை தெரிவு செய்யும் குழுவுக்கு அவர் தலைமை தாங்குவது பொருத்தமானதாகும்.

இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அசந்த டி மெல்லுடன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் மற்றும் கிரிக்கெட் நடுவர்கள் சங்கம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இணைந்துகொள்வர். மேற்கூறியவர்களின் தெரிவுகள் அடிப்படையில் முதலிடம் பெறும் வீரர்கள் தெரிவாவர். இவர்களுக்கான விருதுகள் எதிர்வரும் க பொ. த (உயர்தர) பரீட்சை முடிவடைந்தவுடன் நடைபெறும் விழாவின்போது வழங்கப்படும்.

சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கல் விழா முதன் முதலாக 1978/79 இல் லேக்ஹவுஸ் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற முதலாவது விருது வழங்கல் விழா முதல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்று வந்த விழா இம்முறை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஹெலிபொரேஞ் முதல் பாட்டா வரை அனுசரணை வழங்கிய இந்த விருது வழங்கல் விழாவுக்கு ஸ்ரீலங்கா டெலிகொம்- மொபிடெல் தற்போது அனுசரணை வழங்கி வருகிறது.

ஒப்சேர்வர்- – மொபிடெல் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீர, வீராங்கனைகளுக்கான விருது வழங்கல் விழாவில் உலக சம்பியன்கள் முதல் அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றியவர். சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் சிறந்த போட்டி தீர்ப்பாளர் மற்றும் சிறந்த நடுவர் என தற்போது சர்வதேச கிரிக்கெட் உலகில் பிரகாசிக்கும் பலர் தமது பாடசாலைக் காலங்களில் இந்த விருதை வென்றவர்கள் ஆவர்.

இந்த விருதை முதலாவதாக வென்ற ரஞ்சன் மடுகல்ல முதல் ஒவ்வொரு வருடமும் தெரிவாகும் வீரர்கள் இலங்கை கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1986 இல் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் பெற்றது முதல் இடம்பெற்ற அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ஒப்சேர்வர் விருது வென்ற வீரர்கள் ஓரிருவராவது பங்குபற்றுவது வழக்கமாகிவிட்டது.

உதாரணத்துக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கைக்கான முதலாவது அரைச் சதத்தை அர்ஜுன ரணதுங்க பெற்றார். அவர் அப்பாது ஆனந்தா கல்லூரியில் மாணவராக இருந்தார். அதனையடுத்து இலங்கைக்காக இரண்டாவது டெஸ்ட் அரைச் சதத்தை அதே டெஸ்ட் போட்டியில் ரஞ்சன் மடுகல்ல பெற்றார். இவர்கள் இருவருமே ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வென்றவர்கள்.

அதேபோன்று 1996 இல் உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலியாவை ஏழு விக்கெட்டுகளால் இறுதிப் போட்டியில் தோற்கடித்து உலக கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்கவுடன் ஒப்சேர்வர் விருது வென்ற ஏழு பேர் இருந்தனர்.

அணிகளின் தலைவர்களைப் பொறுத்தவரை ஆறு முன்னாள் அணித் தலைவர்கள் ஒப்சேர்வர் விருது வென்றவர்கள் ஆவர்.

அசோஸியேடட் நியூஸ் பேர்ப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட் (லேக்ஹவுஸ்) ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடல்லின் அனுசரணையில் ஒப்சேர்வர் விருது வழங்கல் விழா நடைபெறுகிறது. மொபிடெல் கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து இந்த விருது வழங்கல் விழாவுக்கு அனுசரணை வழங்கி வருகிறது.

இந்த விழாவை முன்னெடுத்துச் செல்ல லேக்ஹவுஸ் தலைவர் மற்றும் முகாமைத்துவ சபை அனைத்து ஒத்துழைப்பையம் வழங்கி வருகிறது. அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ. தயாரட்ன, ஆசிரிய பீட பணிப்பாளர் தர்மஸ்ரீ காரியவசம், சட்ட மற்றும் நிர்வாக பணிப்பாளர் ரக்கித்த அபே குணவர்தன, நிதிப் பணிப்பாளர் ஜானக ரணதுங்க மற்றும் செயற்பாட்டு பணிப்பாளர் கனிஷ்க விதாரன ஆகியோர் இந்த விழா சிறப்பாக நடைபெற பெரிதும் உதவி வருகின்றனர்.

Wed, 09/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை